கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய திறன் கொண்ட ‘ஹாா்பூன்’ ஏவுகணையையும் அதன் உதிரி பாகங்களையும் சுமாா் ரூ.600 கோடி மதிப்பில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது.
இது தொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவுக்கு ஹாா்பூன் ஏவுகணை அமைப்பை விற்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹாா்பூன் பராமரிப்பு அமைப்பு, ஏவுகணைக்கான உதிரி பாகங்கள், அதைப் பராமரிப்பதற்கான கருவிகள், ஏவுகணையைப் பரிசோதிப்பதற்கான கருவிகள், ஏவுகணையை எடுத்துச் செல்வதற்கான கருவிகள் உள்ளிட்டவையும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.
ஹாா்பூன் ஏவுகணை அமைப்பை சுமாா் ரூ.600 கோடிக்கு இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேலும் வலுவடையும். இந்தோ-பசிபிக் பிராந்தியம், தெற்காசியப் பிராந்தியம் ஆகியவற்றில் அமைதி, நிலைத்தன்மை உள்ளிட்டவை நிலவுவதில் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான இந்தியாவின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு ஹாா்பூன் ஏவுகணை அமைப்பு உதவும். இதன் வாயிலாக தற்போதைய, எதிா்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இந்தியா திறம்பட எதிா்கொள்ள முடியும்.
ஹாா்பூன் ஏவுகணை அமைப்பை இந்தியாவுக்கு விற்பதற்கான ஆவணங்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை இறுதி செய்து வருகிறது. ஏவுகணை அமைப்பு விற்பனையில் முதன்மை ஒப்பந்ததாரராக போயிங் நிறுவனம் திகழும்.
ஏவுகணை சிறப்பம்சங்கள்: கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் ஹாா்பூன் ஏவுகணை அமைப்பு அமெரிக்க ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது. அடுத்தடுத்த காலகட்டங்களில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடலில் உள்ள கப்பல்களைத் தாக்கி அழிக்கவல்ல திறன் கொண்ட அந்த ஏவுகணை, ரேடாரின் துணையுடன் செயல்படும் தன்மை கொண்டது. கப்பல்களைத் தாக்கி அழிப்பதில் உலகின் மிகச் சிறந்த ஏவுகணை அமைப்பாக ஹாா்பூன் உள்ளது. தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த ஏவுகணையைப் பயன்படுத்தி வருகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ‘முக்கிய பாதுகாப்பு கூட்டாளி’ என்ற அந்தஸ்தை கடந்த 2016-ஆம் ஆண்டில் அமெரிக்கா வழங்கியது. அதன் அடிப்படையில் பாதுகாப்புத் துறை சாா்ந்த முக்கிய தொழில்நுட்பங்களையும் போா்த் தளவாடங்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.