171
பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு முன்னே இருக்கும் பெரிய திடல் முழுவதும் மனிதர்களால் நிரப்பியிருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் கூடியிருந்தார்கள். சந்தைக்கடை போல சலசலவென ஒரே சப்தம். யார் என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியாமல் பலர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தலையாட்டிக் கொண்டிருந்தார்கள் என்றாலும் எதிரேயிருக்கும் வேப்ப மரத்தின் அடிப்பகுதி தெரியுதோ இல்லையோ எல்லாருடைய பார்வையும் அங்குதான் இருந்தது.
இவ்வளவு பேர் ஒரிடத்தில் கூடக் காரணம் பெரியநாயகி அம்மன் குதிரையெடுப்பு விழாவுக்காக அம்மனிடம் ஒப்புதல் பெறும் நிகழ்வைக் காண்பதற்காகத்தான். இந்தக் கூட்டத்தில் முன்னே இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அங்கே என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரியாதென்றாலும் திருவிழா குறித்தான விபரத்தை அறிந்து கொள்ளும் ஆவல் இருந்ததாலேயே இவ்வளவு கூட்டம். எப்படியும் குழாய் ரேடியோவில் சொல்லுவாங்க அப்பக் கேட்டுப்போமெனக் காத்திருந்தார்கள்.
பெரியநாயகி அம்மன் குதிரையெடுப்பு என்பது ஒரு ஊர் கூடி முடிவு செய்யும் விஷயமல்ல… ஐந்து ஊர் மக்கள் சேர்ந்து செய்ய வேண்டிய, கொண்டாடக்கூடிய திருவிழா அது. கிட்டத்தட்ட 20 வருசங்களுக்கு மேலாக சாதிப் பிரச்சினையின் காரணமாக திருவிழா நடைபெறவேயில்லை… வருடாவருடம் கூடினாலும் ஏதாவது ஒரு விஷயத்தில் முட்டிக் கொள்ள திருவிழா குறித்தான பேச்சுக்கள் முடக்கப்பட்டுவிடும்.
சில வருடங்களாக சுத்தமாக மழையில்லை… மற்ற ஊர்கள் எப்போதாவது விளைந்தாலும் இந்த அஞ்சு ஊரிலும் விவசாயம் பொய்த்துப் போச்சு… பெருசுக எல்லாம் பெரியநாயகிக்குச் செய்ய வேண்டியதைச் செய்யலை… அதான் அவ போட்டுப் பாக்குறான்னு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க… எப்படி விளைந்த ஊர்… ரெண்டு போகம் வெளயிற இடத்துல ஒரு போகம் கூட வெளையாமப் போச்சேன்னு எல்லாருமே மனசு வெம்பிப் போனாங்க.
கோவில் இருக்கும் சிலாமேகநாடு இளைஞர்கள் இந்த முறை மத்த ஊர்க்காரனுங்க ஒத்துவரலைன்னா நாம தனியாக் குதிரையெடுப்பு நடத்துவோம். இனியும் திருவிழா நடத்தாமப் போடக்கூடாது… ஒவ்வொரு ஊர்லயும் திருவிழாக்களைச் சிறப்பாக் கொண்டாடிக்கிட்டு இருக்கானுங்க… நாம இவ்வளவு பெரிய கோவிலை வச்சிக்கிட்டு, இந்த ஏரியாவுலயே எந்த அம்மன் கோவில்லயும் செய்யாத குதிரையெடுப்பைச் செய்துகிட்டு இருந்துட்டு, அவன் பிரச்சினை பண்ணினான்… இவன் பிரச்சினை பண்ணுறான்னு முட்டி மோதிக்கிட்டு ரெண்டு மாமாங்கமா திருவிழா இல்லாமப் போட்டு வச்சிருக்கோம். இந்தத் தடவை கூட்டத்துல வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசுங்க… மற்றதை நாம பாத்துக்கலாம்ன்னு தீவிரமாக நின்னானுங்க… அவனுக சொல்வதில் இருந்த நியாயத்தின் காரணமாக இளைஞர்களின் முடிவே ஊரின் முடிவாகவும் ஆகியிருந்தது.
பெரியநாயகி அம்மன் கோவில் கிராமத்துக் கோவில்களைவிட சற்றே பெரியது… உள், வெளி என இரண்டு பிரகாரங்களைக் கொண்டது. உள்ளே பிள்ளையார், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் எனத் தனித்தனி சன்னதிகள் உண்டு. நுழைவுவாயிலில் ஏழு நிலைக் கோபுரம் இருந்தது. வெள்ளங்குளம் வேளார் சாமியப்பன்தான் பூஜாரி… காலை. மாலை இருவேளையும் நெய்வேத்தியம் செய்து பூஜை செய்வார். மாலையில்தான் கொஞ்சம் கூட்டம் இருக்கும்… செவ்வாய், வெள்ளி கன்னிப் பெண்கள் விளக்குப் போடக் கூடுவார்கள்.
இந்த முறையும் பிரச்சினையின் விளிம்பு வரை சென்ற கூட்டத்தில் இறுதி முடிவெடுக்காமல் இழுத்துக் கொண்டே போனது. ஆளாளுக்குப் பேசினார்கள்… சிலரின் பேச்சு திருவிழாவை எப்படியும் நடத்த வேண்டும் என்பதாகவும் சிலரின் பேச்சு திருவிழாவை எப்படியும் நிறுத்திவிட வேண்டும் என்பதாகவும் இருந்தது.
“மழையில்லை… பொண்ணுபுள்ளைங்க வாழ்க்கை நல்லாயிருக்குதில்ல… உங்க ஊருகள்ல எப்படியோ எங்கூருல கைம்பொண்ணுங்க அதிகமாயிக்கிட்டே போகுது… எல்லாத்துக்கும் காரணம் ஆத்தாளுக்குச் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்யாததே… எல்லாரும் ஒத்து வந்தீங்கன்னா பழங்காலம் மாதிரி சிறப்பான திருவிழாவாக் கொண்டாடலாம்… ஒத்து வரலைன்னா நாங்க தனியாப் பண்ணிக்கிறோம்… அவுகவுக தோதுப்பட்டப்ப பண்ணிக்கங்க…” என்றார் சிலாமேகநாட்டு அம்பலம் செல்வராஜ்.
“அதெப்படி நீங்க மட்டும் தனியாக் கொண்டாடுவீங்க… அது தப்புல்ல… அஞ்சு ஊரும் சேர்ந்து ஒண்ணாமண்னா நின்னுல்ல கொண்டாடனும்… அதெப்படி நாங்க விட்டுட்டுப் போவோம்…” என்றார் தென்மலை திருநாவுக்கரசு.
“ஏப்பா… என்ன பேசுறே… எங்களுக்கு மட்டும் திருவிழாக் கொண்டாட வேண்டாம்ன்னு எண்ணமா என்ன… எங்கப்பன் காலத்துல நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.. ஏன் எனக்கு விவரம் தெரிய திருவிழா சிறப்பாத்தான் நடந்துச்சு.. எனக்கு கல்யாணம் நடந்த வருசம், இந்தா இந்தாயிருக்கானுங்களே கீழக்கோட்டைக்காரனுங்க அவனுகதான் மரியாதை, மசுருன்னு பிரச்சினையைக் கொண்டு வந்தானுங்க… அன்னைக்குத் தொலஞ்சதுதான்… இன்னும் விடிவு வரலை…” கோபமாய்ச் சொன்னார் பெருவுடையார் கோவில் மணி.
“நாங்க மட்டும்தான் மரியாதை, மசுரெல்லாம் எதிர்ப்பார்த்தோமோ… நீங்க அதே மசுத்தைத்தானே கட்டிக்கிட்டு அழுதீக… எப்பவுமே நாங்க உங்க அடிமையாக் கிடக்கணுமாக்கும்… எல்லாருக்கும் ஒரே மாதிரி மரியாதை வேணுமின்னு கேட்டது தப்பா.. நீங்க கொடுக்கிற வரியைத்தானே நாங்களும் கொடுக்கிறோம்… அப்ப மட்டும் ஊர் வரின்னுதானே வாங்குறீங்க… கொடுக்குறதைக் கொடுங்கன்னு கேக்கலையில்ல… அப்ப நாங்க மரியாதை கேட்டாத் தப்பாக்கும்…” எகிறி விழுந்தார் கீழக்கோட்டை வீராச்சாமி.
‘மரியாதை… அது இதுன்னு எதுவுமில்லாமத் திருவிழாவை நடத்துவோமே… என்றார் மேலக்கோட்டை மாரியப்பன்
பேச்சு இழுத்துக்கொண்டே போக, “இப்ப என்னதாம்பா முடிவு… திருவிழா வேணுங்கிறியளா… வேண்டாங்கிறியளா… எங்கூரு எளவட்டமெல்லாம் நாமளாச்சும் தனியாக் கொண்டாடனும்ன்னு நிக்கிறாங்க… நான் மேல சொன்னதுதான் காரணம்…. வெளையலை… தண்ணியில்ல…. கட்டிக் கொடுத்ததெல்லாம் கைம்பெண்ணா வந்து நிக்கிதுக… என்ன முடிவு சொல்றீக… ஒத்து வந்தா எல்லாருமா நின்னு ஜாம்ஜாம்ன்னு திருவிழாவைக் கொண்டாடலாம்… இல்லாட்டி அவுகவுக ஒரு வாரம்ன்னு திருவிழா நடத்திப்போம்” என உறுதியாகவும் இறுதியாகவும் சொன்னார் செல்வராஜ் அம்பலம்.
நீண்ட பேச்சுக்குப் பின் யாருக்கும் முதல் மரியாதை இல்லை… முதல் விபூதி இல்லை… பொது மண்டகப்படிதான்… ஊரு ஊருக்குத் தனி மண்டகப்படி இல்லை… இளவரசுக தண்ணியைப் போட்டுட்டுப் பிரச்சினை பண்ணக்கூடாது… சாதியைப் போட்டோ சாதித் தலைவர் படத்தைப் போட்டோ மசுருடா… மட்டைடான்னு எழுதியோ பேனரெல்லாம் வைக்கக் கூடாது… எல்லாரும் ஒத்துமையாத் தாயாபுள்ளையா நின்னு திருவிழாவை சிறப்பா நடத்தணும்ன்னு எடுத்த முடிவின் தொடர்ச்சியாய் இதோ அம்மனிடம் ஒப்புதல் பெறக் கூடியிருக்கிறார்கள்.
அம்மனின் ஒப்புதல் பெறும் முறையே வித்தியாசமாய் இருக்கும்… மற்ற கோவில்களைப் போல் சன்னதியில் சாமி அழைத்து அங்கயே ஒப்புதல் கேட்பதில்லை… ஒப்புதல் பெறுமிடம் ஈசானிய மூலையில் இருக்கும் வேப்பமர அடியில்தான். அந்த வேப்பமர அடியில் ஒரு கருங்கல் இருக்கும். அதை அம்மன் அவதரித்த இடமெனச் சொல்லி மஞ்சள் கொட்டி வணங்குவார்கள். அங்குதான் ஒப்புதல் பெற முடியும் என்பது வழிவழியாய் கடைபிடித்து வந்த நம்பிக்கை.
அதே பழைய முறைப்படி கோவில் ஊரணியில் பூஜாரி சாமிநாத வேளார் குளித்து ஈரத்துணியுடன் அம்மனின் முன்னே நின்றார். அவரின் உறவினர் ஒருவர் அம்மனுக்கு தீபாராதனை காட்ட, அம்மன் வேளாருக்குள் புகுந்து சிரித்தாள்.
கோவில் உள் பிரகாரத்தில் ஓடி அவர் வந்து நின்ற இடம் வேப்பமரம்… ஆத்தா.. நல்லதைச் சொல்லுத்தான்னு முன்னால் நிற்பவர்கள் கத்த, அது மெல்ல மெல்ல பின்னால் பரவி எல்லாரும் ஆத்தா.. ஆத்தாவென ஆர்ப்பரித்தார்கள்.
அஞ்சு ஊரு பெரிய தலைக்கட்டுக்களும் வேம்பின் முன் மேல் சட்டை இல்லாமல் வேஷ்டியும் இடுப்பில் கட்டிய துண்டுமாக நின்றார்கள். ஊரெல்லாம் ஒத்து வந்துருச்சு… இப்ப ஆத்தா ஒப்புதல் கொடுக்கணுமேங்கிற பயம் அவர்கள் கண்ணில் தெரிந்தது.
சோலையூர் சோனைமுத்துவும் ராஜாங்கமும் தப்படித்துக் கொண்டிருந்தார்கள். அதன் அடிக்கு ஏற்ப பூஜாரி ஆட ஆரம்பித்தார். கூட்டத்தில் சிலரும் சாமி ஆடிக் கொண்டிருந்தார்கள்.
‘ம்ம்ம்ம்….. என்னய இப்பத்தான் உங்க கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கு…’ பூஜாரி உடம்புக்குள் இருந்து பெரியநாயகி பேசினாள்.
அருகிலிருந்தவர்கள் அமைதியாக சொல்லி வைத்தாற்போல் அந்தத் திடலே மெல்ல மெல்ல அமைதியானது.
“அப்படியெல்லாம் இல்லத்தா… இத்தனை வருசமா நாங்களும் முயற்சி செஞ்சிக்கிட்டுத்தான் இருந்தோம்… முடியலை… இந்த வருசந்தான் ஒத்து வந்திருக்கு… நீதான்த்தா அனுமதி கொடுத்து அணுசரனையா நின்னு விழாவை நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்…” செல்வராஜ் அம்பலம் மற்றவர்களின் பிரதிநிதியாகப் பேச, மற்றவர்கள் ஆமா தாயி போட்டார்கள்.
“சிறப்பாக் கொண்டாடுங்கப்பா…”
“ஆத்தாவ நாங்க குளிர வைக்கிறோம்… எங்களை நீதாந்த்தா குளிர வைக்கணும்…” கும்பிட்டபடி சொன்னார் கீழக்கோட்டை வீராச்சாமி.
“ம்ம்ம்… நானிருக்கேம்பா… கவலைப்படாதே… ம்ம்ம்ம்…. எல்லாரும் நல்லாயிருப்பீங்க… சின்னப்புள்ளங்க வீம்பு பண்ணுவாங்க… ம்ம்ம்…. தீப்பொறி பறக்காம பாத்துக்கங்கப்பா…”
‘அதெல்லாம் சிறப்பா நடக்குமாத்தா… வறண்டு கிடக்க பூமி விளைச்சலைப் பாக்கணுந்தாயி…’ இது தென்மலை திருநாவுக்கரசு.
‘ம்ம்ம்ம்ம்….. நடக்கும்ப்பா…’
‘பொண்ணுபுள்ள வாழ்க்கை நல்லாயிருக்கணுமாத்தா…’ பெருவுடையார் கோவில் மணி.
‘ம்ம்ம்ம்ம்… நானிருக்கேம்ப்பா…’
“ஆத்தா சிறப்பா நாங்க விழாவை நடத்துறோம்… நீ சிரிக்கிற மாதிரி இந்த அஞ்சு ஊரு மக்க சிரிக்கணும் தாயி…” என்றார் மேலக்கோட்டை மாரியப்பன்.
“ஹா…ஹா…ஹா… இத்தனை வருசமாக் கொதிச்சிப்போயி கிடக்கிற என்னோடு வீடு குளிர்ந்தா நீங்க எல்லாரும் குளிர்வீங்கப்பா…”
ஆத்தாவின் அனுமதி கிடைத்ததில் ஊரே மகிழ்ந்தது.
திருவிழா வேலைகள் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தன…
கொசவபட்டணத்தில் ஊர்க்குதிரை, நேர்த்திக்கடன் குதிரையென எல்லாக் குதிரைகளும் தயாராக ஆரம்பித்தன.
பல வருடங்களுக்கு முன்னர் நடந்த குதிரையெடுப்பில் கொண்டு வரப்பட்ட பெரிய பெரிய குதிரைகள் கோவிலின் ஒரு ஓரத்தில் நிறுத்தப்பட்டு, கால ஓட்டத்தில் தலை, கால் என இழந்து மூழியாக நின்றன. புதிய குதிரைகளை நிறுத்தலாம் என அவற்றையெல்லாம் உடைத்து அள்ளிச் சுத்தம் பண்ணினார்கள். வெளிச் சுற்றுப் பிரகாத்தில் இருந்த நெருஞ்சிச் செடிகள் எல்லாம் வெட்டிச் சுத்தம் பண்ணினார்கள். கோவிலுக்கு எதிரே இருந்த கூத்து மேடை உருத்தெரியாமல் இருந்தது… அதை மண்வெட்டிப் போட்டுச் சரி பண்ணினார்கள்… ஒரு வாரத்தில் மூன்று கூத்துக்கள் வைப்பதாய் முடிவு செய்திருந்தார்கள்.
தெற்கே நிற்கும் காவல் தெய்வம் கருப்பனுக்கு கிடாப்பூஜை போட்டு, கீழக்கோட்டை ரோட்டில் இருக்கும் அய்யனாருக்குப் பொங்கல் வைத்து தென்மலையில் இருக்கும் முனீஸ்வரனுக்கு சிறப்புச் செய்து மேலக்கோட்டை ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து பெருவுடையார் கோவில் இடையங்காளிக்குகோழிப்பூஜை போட்டு பெரியநாயகி அம்மன் கோவில் வாசலில் முகூர்த்தக்கால் ஊன்றினார்கள்.
ஒரு வாரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது… தினமும் மண்டகப்படி, அம்மன் ஊர்வலம் என அமர்க்களப்பட்டது சிலாமேகநாடு.
அஞ்சு ஊர் மக்களும் பெரும்பாலான நேரம் கோவிலிலேயே இருந்தார்கள்…
ஐந்தாம் திருவிழா அன்று மழை அடித்துப் பெய்தது. சுத்தம் செய்து வைத்திருந்த கோவில் ஊரணி பாதியளவு நிறைந்தது… மக்களுக்கு சொல்லவொண்ணாச் சந்தோஷம். ஆத்தா கண் திறந்துட்டான்னு மகிழ்வோடு சொன்னார்கள். திருவிழா முடிந்ததும் உழவு ஓட்டலாம் எனக் கணக்குப் போட்டார்கள்.
கொசவபட்டி கலையரங்கில் குதிரைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மழையால் குதிரைகளுக்குச் சேதமில்லை…
குதிரையெடுப்பு அன்னைக்கு மட்டும் மழையில்லாமப் பாத்துக்க தாயின்னும் வேண்டிக்கிட்டாங்க.
தேவகோட்டை சிலம்பணி பிள்ளையார் கோவிலைச் சுற்றி குதிரைகள் நிறுத்தப்பட்டிருந்தன… ஒவ்வொரு குதிரையையும் நால்வர் தூக்கத் தயாராய் காத்திருந்தார்கள்.
பூஜாரி இடமிருந்து வலமாகத் தீபம் காட்டியபடி வந்தார்.
‘அதென்ன தீபம் அங்கியிருந்து காட்டினாத்தானா… இங்கயிருந்து காட்டினா சாமி ஏத்துக்காதா…?’ என வலப்பக்க கடைசியில் நின்ற கண்ணன் அருகிலிருந்த வீராச்சாமியிடம் கேட்டான்.
‘இதெல்லாம் ஒரு குத்தமாடா… அவரு பொறகாரம் வார முறையில காட்டுறாரு… எங்கிட்டிருந்தோ காட்டட்டுமே… பேசாம இருங்கடா… பிரச்சினையை இழுத்துறாதீக…’ என அடக்கினார்.
காரைக்குடி அருளானந்து டிரம்செட்டின் அடி ஊரையே குலுக்கிக் கொண்டிருந்தது… ஆடாதவர்களையும் அந்த அடி ஆட வைத்தது. ஏய் முத்துப்புள்ளக்கிட்ட புள்ளைய வாங்கிக்கங்க… அவ ஆட ஆரம்பிச்சிருவா… அப்புறம் புள்ளைய விட மாட்டான்னு ஒரு பெரிய மனுசி கத்திக்கிட்டே போக, சில இளவட்டங்கள் ‘த்தாத்தா… த்தாத்தா…’ என தப்புக்கு ஏற்ப ஆடினார்கள்.
யூசுப் பாய் வானத்தை விட்டுக் கொண்டே முன்னே நடந்தார். குதிரைகள் ஒவ்வொன்றாய் தூக்கப்பட்டு… ஊர்வலமாய் கோவில் நோக்கி நகர ஆரம்பித்தன.
இத்தனை வருசமில்லாத திருவிழா என்பதால் கூட்டம் அலை மோதியது.. பிள்ளையார் கோவிலில் இருந்து பெரியநாயகி அம்மன் கோவில்வரை நிறைபெருக்காக ஆட்கள்…
அவர்களுக்கு இடையே ‘பாம்…பாம்’ என்றபடி ஐஸ் வண்டிகள்…
வழி நெடுக தண்ணீர் மோர் பானகப்பந்தல்கள்…
சாக்லெட், சுவிட் கொடுக்கும் செட்டியார்கள்…
பொங்கல் புளியோதரை கொடுக்கும் பெரும் பணக்காரர்கள்…
வழியெங்கும் புதிதாய் முளைத்த வளையல், அல்வா, பாத்திர, சர்பத் கடைகள்…
பூ மாலைக் கடைகள்.. கூடையில் பூ விற்கும் கிழவிகள்…
பொறி உருண்டை விற்பவர்கள்…
ஊசி, பாசி விற்கும் குறவர்கள்…
மண்பானை விற்பனைக் கடைகள்…
பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகள்….
ஒரு வழியாகக் குதிரைகள் கோவிலை வந்து அடைந்து வரிசையாக வைக்கப்பட்டன…
அஞ்சு ஊர் சார்பாக ஒவ்வொரு ஊருக்குமான பொதுக் குதிரைகள் முன்னால வைக்கப்பட்டு, நேர்த்திக்கடன் குதிரைகள் பின்னால் வைக்கப்பட, திடலில் போடப்பட்டிருந்த நீண்ட கொட்டகை முழுவதும் குதிரைகளால் நிரம்பியது. சின்னதும் பெரியதுமாய்க் குதிரைகள் அணி வகுத்து நின்றது பார்ப்பதற்கே பரவசமாய் இருந்தது.
பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன….
குதிரைகளைப் பார்க்க கூட்டம் கட்டி ஏறியது….
போலீஸார் குதிரைகள் மீது மக்கள் விழுந்து விடாமல் தடுப்புக் கம்புகள் அருகே காவலிருந்தனர்.
பூஜாரி தீபத்தட்டுடன் வந்தார்…
முதலில் சிலாமேகநாடு குதிரைக்கு பூஜை செய்தார்…
அப்படியே வரிசையாய் தென்மலை, பெருவுடையார் கோவில், மேலக்கோட்டை, கீழக்கோட்டை என பூஜைகளை முடித்தார்.
“இப்பவும் பாருங்க நம்ம குதிரைக்குத்தான் கடைசி…” அருகிலிருந்த பெரியப்பா சோமுவிடம் பல்லைக் கடித்தபடி சொன்னான் கண்ணன்.
“வச்ச வரிசைப்படி வர்றாருடா… இதெல்லாம் ஒரு தப்புன்னு எடுத்துக்கிட்டா தப்புத்தான்… எல்லாம் சரியின்னு போன்னா சரிதான்… நாம சரியின்னே போவோம்…” இழையோடும் புன்னகையுடன் சொன்னார் சோமு.
“ஏன் இந்தப் பக்கமிருந்து போனா வரிசையா வராதாக்கும்… அவனுக ஒப்புக்கு அது இல்லை… இது இல்லை… எதுவும் வேண்டான்னு பேசிட்டு நம்மளத்தான் கீழ வச்சிருக்கானுங்க…”
“சரி இப்ப அதுக்கு என்ன செய்யணும்…? எதுவாயிருந்தாலும் திருவிழா முடிஞ்சி காலாஞ்சி பிரிக்கும் போது பேசிக்கலாம்… நம்மளால பிரச்சினை வந்துச்சுன்னு இருக்கக் கூடாது… அம்புட்டுத்தான்…”
“என்னமோ போங்க… இன்னமும் நாம அவனுகளுக்கு அடிமையாத்தான் இருக்கோம்…”
மொத்தமாய் பெருந்தீபம் முடித்து துணூறு கொடுக்கப்பட்ட போதும் கீழக்கோட்டைக்கு கடைசியாக கொடுக்கப்பட, “இதுதான் நீங்க சொன்ன எல்லாரும் சமமா நின்னு திருவிழாவைக் கொண்டாடுறதா…?” கோபமாய்க் கேட்டபடி குதிரைக்கு அருகே வந்தான் கண்ணன்.
“கண்ணா… பேசாமா இருக்க மாட்டே…” அதட்டினார் வீராச்சாமி.
அடுத்தடுத்து பேச்சுக்கள் தொடங்க… சிறு பொறி மிகத் தீவிரமாய் ஆகிப் போனது.
பேச்சுக்கள் எல்லாம் பொய்த்துப் போக…
போலீஸ் தடுத்தும் பிரச்சினை வெடிக்க…
கூட்டமெல்லாம் அலறி அடித்துச் சிதறி ஓட…
அடுத்த அரைமணி நேரத்தில்…
அருகிலிருந்த கடைகள் எல்லாம் நொறுக்கப்பட…
அஞ்சு ஊர்க் குதிரைகளும் அடையாளம் தெரியாமல் நொறுக்கப்பட்டிருக்க..
குதிரைகள் எல்லாமே அடித்து நொறுக்கப்பட்டிருக்க…
போலீஸாரின் தீவிர தடியடித் தாக்குதலில் அடிதடியில் இறங்கிய இளைஞர் கூட்டம் கலைய…
செருப்புக்கள் திசை மாறிச் சிதறிக் கிடக்க…
கருவறைக்குள் பெரியநாயகி புன்னகையிழந்து நிற்க…
அவளருகே கீழக்கோட்டை வீராச்சாமியின் கரங்களுக்குள் பெருவுடையார் கோவில் மணியின் பேத்தி பாதுகாப்பாய் இருந்தாள்.
-
‘பரிவை’ சே.குமார்.
சிறப்பு. கதை முடிவில் அம்மன் புன்னகையை இழந்தாலும், மீண்டும் புன்னகைக்க காரணம் அவர் காலடியில் இருபதாக முடிந்தது மிக சிறப்பு.