இந்தியாவில் கோவிட் பாதிப்பு நேற்று முன்தினம் 35 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் நேற்று 39 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் தொற்று பாதிப்பு கடந்த 50 நாட்களில் இல்லாத அளவு உயர்ந்ததே தினசரி பாதிப்பு திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் 12,818 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,518 ஆக உயர்ந்தது.குறிப்பாக நேற்று, 1,28,489 மாதிரிகள் மட்டும் பரிசோதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு சதவீதம் 13.6 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் கோவிட் பாதிப்பு சதவீதம் 17ஆக உள்ளது. இதேபோல திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளே தொற்று பரவலுக்கு காரணமாக கூறப்படுகிறது.இதையடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி மத்திய – மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கவும், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.