ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறாதது குறித்த ரோகன் போபண்ணாவின் குற்றச்சாட்டுகள் தவறானவை என இந்திய டென்னிஸ் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகலும், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, அங்கிதா ராணா இணையும் தகுதிப் பெற்றுள்ளனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணா-சுமித் நாகல் இணை தகுதி பெறவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த போபண்ணா, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்கம் தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
காலக்கெடு முடிந்ததால் சுமித் நாகல் மற்றும் தனது விண்ணப்பத்தை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதற்கு இந்திய டென்னிஸ் சங்கத்தின் தவறான வழிநடத்தலே காரணம் என பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட சானியா மிர்சா, போபண்ணாவின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் டென்னிஸில் இந்தியா ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த அகில இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் அனில் துபார், போபண்ணாவின் குற்றச்சாட்டு தவறானது என தெரிவித்துள்ளார்.
சர்வதேச டென்னிஸ் சம்மேளன விதிகளின்படி போபண்ணா தகுதி பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதே போன்று, சானியாவின் ட்விட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்த அனில் துபார், சானியாவின் பதிவு அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்துள்ளார்.