விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் விளையாட இருக்கிறார்.
அண்மையில் நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது 6வது விம்பிள்டன் பட்டமாகும். அதோடு, 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற 3வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி, டோக்கியோவில் பலத்த மருத்துவ பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது.
இதில், ஒரு பகுதியாக நடத்தப்படும் டென்னிஸ் போட்டியில் செர்பியாவைச் சேர்ந்தவரும், விம்பிள்டன் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் கலந்து கொள்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய நாட்டு அணியோடு நான் டோக்கியோ செல்கிறேன். செர்பியாவுக்காக விளையாடுவது பெருமையளிக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.