ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.
டி20 உலகக் கோப்பை – ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர எட்டு அணிகளுடன் சேர்ந்துவிடும். முதல் சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறும். இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் பிசிசிஐயின் சார்பாகவே டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்குபெறும் அணிகளை டி20 தரவரிசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது ஐசிசி.
குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள். அதேபோல குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தச் சுற்றுக்கு சூப்பர் 12 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
தகுதிச்சுற்று ஆட்டங்கள் முதல் சுற்று ஆட்டங்களாக அழைக்கப்படுகின்றன. அவற்றில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.