செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தின் கனவு தகர்ந்தது: பெனால்டி முறையில் யூரோ கோப்பையை வென்ற இத்தாலி

39views

யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் பெனால்டி முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது இத்தாலி அணி.

ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியான யூரோ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த யூரோ போட்டி, கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டுக்கு மாற்றப்பட்டது. தலைசிறந்த 24 நாடுகளின் அணிகள், பங்கேற்ற இப்போட்டி கடந்த ஜூன் 11-ம் தேதி 11 நகரங்களில் தொடங்கியது.

லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – இத்தாலி அணிகள் மோதின.

அரையிறுதி ஆட்டங்களில் முன்னாள் உலக சாம்பியன் இத்தாலி பெனால்டி ஷூட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் டென்மாா்க்கை வென்றது.

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் கடந்த 1966-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதே, அது இறுதியாக வென்ற பெரிய போட்டியாகும். அதன் பின் யூரோ 68, 96, 1990, 2018 உலகக் கோப்பை, 2019 யூஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் உள்ளிட்ட 5 பெரிய போட்டிகளில் அரையிறுதியோடு வெளியேறியது. இந்நிலையில் நடப்பு யூரோ போட்டியில் பலம் வாய்ந்த ஜொமனி, உக்ரைன் அணிகளைத் தொடக்க சுற்றுகளில் வெளியேற்றியது. இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி 55 ஆண்டுகாலமாகக் கோப்பையை வெல்லும் கனவை நனவாக்கும் முனைப்பில் இருந்தது.

அதே நேரம், இத்தாலி அணி யூரோ போட்டியில் 1968-ல் மட்டுமே பட்டம் வென்றது. மேலும் 2000, 2012-ல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. நிகழாண்டு யூரோவில் அரையிறுதியில் ஸ்பெயினை வீழ்த்திய இத்தாலி, இறுதி ஆட்டத்துக்கு முன்பு தொடா்ந்து 33 ஆட்டங்களில் வென்ற பெருமையுடன் திகழ்ந்தது. கடந்த 2018 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ஆனால் இத்தாலி அணி போட்டிக்கு கூட தகுதி பெறாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டது. மீண்டும் புத்தெழுச்சி பெற்ற அணியாக உள்ள இத்தாலி தனது இரண்டாவது யூரோ பட்டத்தை கைப்பற்றும் தீவிரத்தில் இருந்தது.

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் இங்கிலாந்தும் 67-வது நிமிடத்தில் இத்தாலியும் கோலடித்தன. கூடுதல் நேரத்துக்குப் பிறகும் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. இறுதியில் பெனால்டி முறையில் 3-2 என இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது இத்தாலி அணி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!