இந்தியாசெய்திகள்

ஜனநாயகம், கருத்து சுதந்திரம் குறித்து அமெரிக்க நிறுவனங்கள் பாடம் எடுக்க வேண்டாம்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து

76views

ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து அமெரிக்க சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் ‘சமூக வலைதளமும் சமூகப் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:

இந்தியாவில் சமூக வலைதளங்கள் சுதந்திரமாக செயல்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம், அதனை பயன்படுத்தும் பொதுமக்களின் நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியதும் அரசின் கடமை. அந்த நோக்கத்தில்தான், சமூகவலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க புதியவிதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. சமூக வலைதளங்களின் பயன்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக இந்த விதிமுறைகள் வரையறுக்கப்படவில்லை.

சமூக வலைதள பயன்பாட்டாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இந்தியாவில் இயங்கும் வகையில் ஒரு குழுவை அமைக்குமாறும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை முதலில் பதிவிட்டவர் யார் என்ற தகவலை தெரிவிக்குமாறும் சமூக வலைதள நிறுவனங்களிடம் அரசு கேட்கிறது. இவற்றைதவிர, வேறு எந்த அசாத்தியமான காரியங்களையும் சமூக வலைதள நிறுவனங்களிடம் இருந்து கேட்கவில்லை.

ஆனால், ஒருசில சமூக வலைதள நிறுவனங்கள் இந்த விதிமுறைகளுக்கு எதிராக பேசி வருகின்றன. இந்தியாவில் நியாயமாக தேர்தல் நடக்கின்றன, ஊடகங்களும், நீதித் துறையும் சுதந்திரமாக செயல்படுகின்றன. எனவே, லாபம் ஈட்டும் நோக்கில் இங்கு வந்து தொழில் புரியும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், ஜனநாயகம் மற்றும்கருத்து சுதந்திரம் குறித்து இந்தியாவுக்கு பாடம் நடத்த வேண்டாம். இங்கு தொழில்புரிய வேண்டுமென்றால், இந்தியாவின் சட்டங்களை பின்பற்றியே ஆக வேண்டும்.

புதிய விதிமுறைகளுக்கு இணங்க கூடுதல் அவகாசம் தருவதாக நான் உறுதியளித்தேன். ஆனால், அவர்கள் (ட்விட்டர்) அதற்கு செவிசாய்க்கவில்லை. அதனால் அவர்கள் இந்தியாவின் சட்ட பாதுகாப்பை இழந்துவிட்டனர். இப்போது என்ன செய்வது? நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்கை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!