கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து ஒதுக்கீட்டில் பாரபட்சம் இல்லை: மும்பை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதுதொடர்புடைய கருப்பு பூஞ்சை நோய் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பொதுநல வழக்குகளை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதில் மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் மருந்தை மத்திய அரசு சமமாக விநியோகிக்கிறதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் நேற்று நீதிமன்றத்தில் கூறியதாவது:
மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கான ஆம்போடெரிசின்-பி மருந்துபற்றாக்குறையாக இருந்தபோதும், அனைத்து மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது.
நாட்டில் கிடைக்கப்பெறும் மருந்து மற்றும் மாநிலங்கள் எழுப்பும் கோரிக்கையின் அடிப்படையில் நாங்கள் மருந்தை ஒதுக்கீடு செய்து வருகிறோம். இதில் பாரபட்சம் எதுவும் இல்லை. நாட்டில்இந்த மருந்து போதிய அளவுகிடைப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் கூறினார்.