சர்ச்சையை கிளப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பதிவு… மீம் போட்டு முற்றுப்புள்ளி வைத்த அஸ்வின்
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடர்பாக வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறிய கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்ட நிலையில், அஸ்வின் பகிர்ந்த மீம் பதிவின் வாயிலாக மஞ்ச்ரேக்கர் விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 37 டெஸ்ட் போட்டிகளிலும், 74 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ள மஞ்ச்ரேக்கர் அவ்வப்போது முன்வைக்கும் விமர்சனங்களும், கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகும். இந்திய அணியின் ராக் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஜடேஜா குறித்து பாகுபாடு கலந்த வர்ணனை செய்ததற்காக ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளாகியிருந்தார் மஞ்ச்ரேக்கர்.
சில காலம் பெரிதளவில் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த மஞ்ச்ரேக்கர், சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுக்குள்ளானது. “ALL TIME GREAT” அதாவது கிரிக்கெட்டில் அனைத்து காலங்களுக்கும் சிறந்த வீரர்களாக பிராட் மேன், கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்டவர்களை மட்டுமே கருதுவேன் எனவும், அஸ்வின் அந்த வரிசையில் இருக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டிருந்தார். மஞ்ச்ரேக்கரின் இந்தக் கருத்து ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மற்றொரு பதிவில் பதிலளித்த மஞ்ச்ரேக்கர், தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் கூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை எனும்போது அவரை எப்படி சிறந்த வீரராக கருதுவது எனக் கூறியிருந்தார். மேலும் இந்திய ஆடுகளங்களில் அஸ்வினுக்கு நிகராக ஜடேஜாவும் பங்களிப்பார் எனக் கூறிய மஞ்ச்ரேக்கர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அஸ்வினைக் காட்டிலும் அக்ஸர் பட்டேல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் எனவும் ஒப்பீடு செய்திருந்தார்.
இந்நிலையில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது தான் கிரிக்கெட் வீரர்களை தலை சிறந்தவரகளாக தீர்மானிக்குமா எனக் கேள்வி எழுப்பிய பேட்ஸ்மேன் அபிநவ் முகுந்த், சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்தை தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் கூறியிருந்தார்.
ஒரு வாரமாக இந்த விவகாரம் புகைந்து வந்த சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் அந்நியன் திரைப்பட டெம்ப்ளேட்டில் மீம் ஒன்றை பகிர்ந்து அதில் மஞ்சரேக்கரையும் டேக் செய்திருந்தார். “அப்படி எல்லாம் சொல்லதடா ச்சாரி, மனசு வலிக்கிறது” என நகைச்சுவையுடன் மஞ்சரேக்கரின் கருத்துகளை அவர் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் அஸ்வினின் பதிவை மேற்கோள்காட்டி பதிலளித்துள்ள மஞ்ச்ரேக்கர், வெளிப்படையாகவும், சாதாரணமாக கூறப்படும் கருத்துகளும் வம்புகளுக்கு வித்திடுவதாக நகைப்புடன் பதிவிட்டுள்ளார்.
இதனால் விமர்சனங்கள், சர்ச்சை சலசலப்புகளுக்கு இருவர் இடையிலான நேரடி உரையாடல் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கபில்தேவுக்கு அடுத்த படியாக இந்திய அணிக்காக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள், 400க்கும் விக்கெட்டுகள் மற்றும் 5 சதங்களை விளாசிய ஆல்ரவுண்டராக அஸ்வினே உள்ளார் என்பதை மறுத்திட முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி வரலாறு படைத்த டெஸ்ட் தொடரில் ஹனுமா விஹாரியுடனான அஸ்வினின் பார்ட்னர்ஷிப் நிச்சயம் தலைமுறைகள் தாண்டியும் பேசப்படும்.