467
கிருஷ்ணன் & லட்சுமி தம்பதிகளின் கடைக்குட்டி செல்ல மகளான பிரேமா கிருஷ்ணனுக்கு உடன் பிறந்த அண்ணன்கள் மூவர். கூட்டுக்குடும்பமாக ஜொகூர், சா ஆ என்கிற இடத்தில் பிறந்து வளர்ந்து, தற்பொழுது திருமணத்திற்கு பிறகு, மலேசியா,ஷா ஆலாமில் வசிக்கிறார். இவருடைய அம்மா லட்சுமி திருவண்ணாமலை, வந்தவாசியை சேர்ந்தவர் என்பதும் குறிபிடத்தக்கது. அம்மாவின் தாய்நாடு இந்தியா என்பதால், தமிழகம் மீது அளவற்ற பாசமும், அங்குள்ள உறவுகளின் அன்பும் இன்றும் தொடர்கிறது என்கிறார் பிரேமா.
மின்னல் பண்பலையில் அறிவிப்பாளராக, தொகுப்பாளராக, தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். முதுகலை பட்டதாரி ஆன இவர் எப்படி மின்னல் பண்பலைக்கு வந்தார் என்ற கேள்விக்கு அவரின் பதில்
“2006 ஆம் ஆண்டு, மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஊடக துறைக்கு படிக்கும் போது, பயிற்சி மாணவியாக மின்னல் எப் எம் வந்தேன். மூன்று மாத பயிற்சிக்கு பிறகு அங்கேயே தற்காலிக வேலையில் பணியாற்றி, 2008 ஆம் ஆண்டில் முழு நேர அரசாங்க பணியாளராக வேலை கிடைத்தது. 2008 தொடங்கி இப்பொழுது வரை மின்னலில் அறிவிப்பாளராக பணியாற்றி வருகிறேன்” என்றார்.
இவருடைய தயாரிப்பில், “அழகிய மலேசியா” எனும் சுற்றுலா நிகழ்ச்சி, இசை சொல்லும் கதை, நெஞ்சே எழு, ஆசை ஆசையாய், மண்ணின் நட்சத்திரம் என பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுள்ளார். ஆசை ஆசையாய் நிகழ்ச்சி அவருக்கு ஓர் அடையாளம் தந்தது. நேயர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி, அவர்களை மகிழ்ச்சி படுத்த வாய்ப்பு கிடைத்தது. பழைய பாடல்கள் வாயிலாக நேயர்களின் மனதில் ஓர் இடம் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது ” http://இசை.my ” மலேசிய கலைஞர்களின் படைப்புகளை ஒலிப்பதிவு செய்து ஒலிப்பரப்பும் செய்கிறார்.
புதிய & வளரும் கலைஞர்கள், புகழ்ப்பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் சரி சமான வாய்ப்பை வழங்கி நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார். நேயர்களுக்கு என்ன பிடிக்குமோ அதனை அறிந்து ரசனையோடு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவர், எண்ணங்கள் வண்ணங்கள் நிகழ்ச்சியில் தேனிசை பழம் பாடல்கள் இனிய குரலில் அறிவிப்பு செய்து நேயர்களை மகிழ வைக்கிறார்.
மலேசியா அரசாங்க வானொலி என்பதால் கூடுதல் பொறுப்புணர்வோடும் சொல்லும் தகவல் உண்மையானதாகவும் இருப்பது அவசியம் என்கிறார். பார்வையற்றவர்கள் முதல் சிறியவர்கள் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களும் வானொலி ஒலிப்பரப்பை உலகின் பல முலை முடுக்கிலும் கேட்க முடியும். rtmklik என்ற செயலி( apps) வாயிலாக மின்னல் பண்பலை நிகழ்ச்சியை நேயர்கள் ரசிக்கலாம்.
நேயர்கள், அறிவிப்பாளர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களாக தான் பார்க்கின்றார்கள். ஒவ்வொரு முறை ஒலிப்பரப்பு அறையில் பேசும்போது, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் நேயர்கள் நல்ல இருக்கியமா, சாப்பிட்டுங்களா, வீட்டுல எல்லோரும் நலமா என நலம் விசாரித்து தங்கள் அன்பை பகிர்ந்து கொள்வார்கள் என அறிவிப்பாளர் பிரேமா கிருஷ்ணன் தெரிவித்துக்கொண்டார்.
ஒரு ஆண் சாதிக்க, ஒரு பெண் இருப்பது போல, ஒரு பெண் சாதிக்க ஆணின் துணை உண்டு என்கிறார். முழு சுதந்திரமும், நம்பிக்கையும் தந்து தன் வளர்ச்சிக்கு மிக பெரிய அளவில் உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பவர் கணவர் சுரேஷ். இவ்வேளையில் கணவருக்கும் மாமியாருக்கும் நன்றி தெரிவிக்கும் இவருக்கு, லக்ஷன்(7), ஷாமித்ரா(4), திவாஷன்(2) என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
பிள்ளைகள் மூவரையும் சிறப்பாக வளர்ப்பது இலக்காவும், தன்னுடைய அறிவிப்பு பணி மேலும் சிறப்பாக படைக்கவும், சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யவும் ஆர்வமாக இருக்கிறார் பிரேமா கிருஷ்ணன்.
add a comment