வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அதி தீவிர புயலாக மாறும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலைத் துறையின், தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
வங்காள வரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தம், போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீ தொலைவில் காற்றழுத்தமாக மையம் கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை புயலாக தீவிரமடைகிறது.
இது தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்பகுதியை மே 26- ஆம் தேதி காலை சென்றடையும். இது வடக்கு ஒடிசா-மேற்கு வங்கத்தை கடந்து, பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, மே 26ம் தேதி மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் எனத் தெரிகிறது.
மழை எச்சரிக்கை:
இதன் காரணமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், இன்றும், நாளையும், பல இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.
ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்களில் மே 25ம் தேதி பல இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும், பாலசூர், பத்ரக், கேந்திரபாரா, மயூர்பன்ஜ் உள்ளிட்ட சில இடங்களில் தீவிர கனமழையும் பெய்யும்.
மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் மே 25ம் தேதி அன்று பல இடங்களில் மிதமான மழை பெய்யும். மெதின்பூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ், ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் கன மழை முதல் தீவிர கனமழை பெய்யும்.