Uncategorizedசெய்திகள்தமிழகம்

தமிழக கொரோனா பாதிப்பு பதிவில் மோசடி; ‘மெட் ஆல்’ உரிமம் ரத்து

94views

தமிழகத்தில் கடந்த 19, 20ம் தேதிகளில் கொரோனா தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று இருந்ததாக ஐசிஎம்ஆர் போர்டலில் மெட்- ஆல் தனியார் ஆய்வகம் தவறாக பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தனியார் ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழக சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகம் வெளியிட்ட உத்தரவில், ” ஐசிஎம்ஆர் போர்டலில், மெட் ஆல் தனியார் ஆய்வகம் பதிவேற்றம் செய்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை ஆய்வு செய்ததில், கீழ்காணும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

  1. மேற்கு வங்கம் கொல்கத்தா மாநகரில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் போர்டலில் ஆய்வகம் தவறாக பதிவேற்றியுள்ளது.
  2. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில், தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று இருந்ததாக ஐசிஎம்ஆர் போர்டலில் கடந்த 19, 20ம் தேதிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
  3. ஐசிஎம்ஆர் போர்டலில் பதிவேற்றம் செய்யப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பில் பல்வேறு தகவல்கள் விடுபட்டுள்ளன .

கொரோனா சோதனைக்கூடங்கள் தொடர்பாக ஐசிஎம்ஆர், மாநில அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. மேலும், மேற்கூறிய செயல்கள் மூலம் தமிழக அரசின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு சாதகமற்ற சூழலை தனியார் ஆய்வகம் எற்படுத்தியிள்ளது.

குறிப்பாக,

  1. பிறமாநிலங்களில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகள் தமிழகத்தோடு இணைக்கப் பட்டதால், மாநிலத்தின் கொரோனா பாதிப்புகளும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் விகிதமும் அதிகரித்து காட்டப்பட்டுள்ளன. இது, தமிழக அரசின் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதாக அமைந்துள்ளது.
  2. குறைந்த அளவே உள்ள சுகாதார வளங்கள் மீது அதிக சுமை ஏற்றப்பட்டுள்ளது. இது, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நோய்த் தொற்று நடவடிக்கைகளை சீர்குலைத்துள்ளது.
  3. இந்த செயல் பொது மக்களுக்கும், கொரோனா தொற்று இல்லாதவர்களுக்கும் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
  4. கொரோனா இல்லாதவர்களுக்கு தொற்று இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட ஆய்வகத்துக்கும், சில தனியார் மருத்துவமனைகளுக்கும் முறைகேடான தொடர்பு இருக்கலாம் என அரசு சந்தேகிக்கிறது. நோய்த் தொற்று பாதிப்புகளை அதிகிரித்து, தனியார் மருத்துவமனைகள் வருமானம் ஈட்டும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.
  5. பதிவேற்றம் செய்யப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. தமிழகத்தின் உண்மையான தொற்று பாதிப்பு அளவை அடையாளம் காணுவதை மேலும் தாமதப்படுத்துவதாகஅமைகிறது.

எனவே, 1993 வருட தமிழ்நாடு பொது சுதாதார சட்டத்தின் கீழ், மெட் ஆல் தனியார் ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை உரிமம் ரத்தாகிறது. இந்த அறிவிப்பு பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள், ஆய்வகத்தின் நிர்வாக இயக்குனர் முறையான விளக்கத்தை தொடர்புடைய அரசு முகமையிடம் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ ஆய்வுக்குழு ஆய்வகத்தை மேற்பார்வை செய்த பிறகு, கொரோனா பரிசோதனையை மீண்டும் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!