டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக மற்ற நாடுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில், இப்போட்டியை நடத்தவுள்ள ஜப்பான் நாட்டின் மக்களிடையே கரோனா காலத்தில் ஒலிம்பிக் போட்டி தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளதாம். ஒலிம்பிக் போட்டியை மேலும் ஓராண்டு தள்ளிவைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும் வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிக்காமல், உள்ளூர் பார்வையாளர்களைக் கொண்டு எப்படியாவது ஒலிம்பிக் போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் ஜப்பான் அரசு தீவிரமாக உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இறுதிவரை ஜப்பானில் 1 சதவீத மக்கள் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வீரர்களுக்கும் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்பதால், திட்டமிட்டபடி போட்டி நடக்குமா என்ற கேள்வி அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.
அதே நேரத்தில் இந்தியா, அமெரிக்கா, சீனா, இத்தாலி போன்ற நாடுகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக வேகமாக தயாராகி வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை இந்திய அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மல்யுத்த வீரர்கள், துப்பாக்கி சுடும் வீரர்கள், வில்வித்தை வீரர்கள் மற்றும் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் பலரும் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தங்கள் நாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ள சீன அரசு, மற்ற நாட்டு வீரர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் என அறிவித்துள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தங்கள் வீரர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இந்த ஆண்டில் எப்படியாவது ஒலிம்பிக்கை நடத்தியாக வேண்டும் என்பதில் பல நாடுகளும் உறுதியாக உள்ளன.