குட்டி ராஜகுமாரி
உன் பிஞ்சு விரல்களின் தீண்டல்களில்
உன் அப்பா ஒரு பியானோவைப் போல்
உருமாறிக் கொண்டிருக்கிறதை உணர்கிறேன்
குட்டி விரலின் ஒவ்வொரு தொடலிலும் எழும்
ஒவ்வொரு”க்ளங் ” கிலும் ஒரு வண்ண நீர் ஊற்றின்
பீறிடலாக அவன் கிளர்ந்து போகிறான்.
எழும்பும் இசை ஜாலங்கள் ,மனதில்
குதித்து குமிழியிடும் நீர் ஊற்றுக்களின் ரூபங்களில்
அவன் நாங்கள் அறிந்திராத புது மனிதனாகிறான் /
ஒரு மந்திரவாதி இசைக்காரனாய் அவனை
ஆட்டுவிக்கிறாய் குட்டி ராஜகுமாரி !
தயக்கமாகவே , மெதுவாகவே எப்போதுமிருக்கும்
அவன் வார்த்தைகள்
கொஞ்சலின் பிரியத்தில் தோய்ந்து
ராக ஆலாபனைகளாய் ,
சூழல் மறந்த மனதின்
ஸ்வரங்களாய் மாறிக் கொண்டிருக்கிறது .
பரபரப்பில் படபடக்கும் பறவையின் சிறகுகளென
நீ துள்ளுகிறாய் குட்டி ராஜகுமாரி
சிறியதொரு அறையின் வெளியில்
அற்புதமாய் விரிகிறது உங்களிருவரின் உலகம்
எவரைப் பற்றியும் எதைப் பற்றியும்
எவ்வித யோசனைகளுமின்றி நீங்களிருக்க
மனமெங்கும் நுரைத்துப் பொங்கும்
மகிழ்வின் அலைகளின் இரைச்சல்களினூடாய்
தொட்டுத் தடவி முகமெங்கும் வழியும்
மழைச் சாரல்களினூடாய்
காதுகள் கனிய மனத்தைத் தழுவி
மயக்கும் குழலோசையினூடாய்….
கண்டதில்,பார்த்ததில் உணர்ந்ததில் ஒரு சிறிதளவையேனும்
எழுதிப் பார்க்கிறேன் நான்.
வீட்டின் காலி அறைகள்
உன் வார்த்தைகளால் ததும்புகின்றன .
நீ பயன்படுத்தின
உன் பொருட்கள் உன் இன்மையை
கத்திக் கொண்டிருக்கின்றன.
வீட்டின் அடர் அமைதியில்
இம்சிக்கும் பேரோசையாய் எழும்பி
அலை மோதுகின்றன மனதில்.
செய்வதறியாது வெய்யிலை
வெறித் திருக்கிறேன்
அநேக போன வார இந்நேரங்கள்
வரிசையாய் அகத்தில் மிதந்து
கண்ணீரைக் கூப்பிடுகின்றன.
காணமல் போன பின்பே
விம்மலுடன் ஏங்கும் மனது.
என்ன செய்யலாம் இந்த பிரியத்தை
மருகிப் போகிறேன் நான்
பதில்களின்றி .
அன்பு.
சந்தடிகள் மிகுந்த
காலைத் தெருவின்
அவசரங்களில் விர்ரிட்டு வரும் பைக்கை நிறுத்தியதில்
கசந்து போன கோபக்கார இளைஞனிடம்
“ஒரு பத்து ரூபா தருவி யாப்பா ?”
என கெஞ்சலுடன்
தலை நரைத்.த தளர்ந்து போன தந்தையின் வார்த்தைகள் தடுமாறின.
அவசர வேலையாய் அவரவர் நகர
அவனும்.
அவர் ஏக்கமாய் நின்றிருக்க
சிதறின வார்த்தைகள்
மனதுள் ஒட்டியதில்
முள்ளாய்த் தைத்தன .
வெய்யில் சுட்டெரித்தது இன்னமுமாய்.
- கார்த்திகா ராஜ்குமார்