கட்டுரை

மாறிப் போனவைகள் !

82views

ந்தாவது படிக்கிற மகன்கள் முடி வெட்டுவது பற்றி தீர்மானிக்கிற உரிமை அப்பாக்களுக்கு மட்டுமே என்று நாற்பது வருடங்களுக்கு முன்பாக இருந்திருக்க வேண்டும் .அப்பா என்னை கூட்டிக்கொண்டு போய் சலூனில் விடுவார்.

உதகையில் பிரதானசாலையில் இருந்தது அது. என்னைவிட உயரமான அந்த சலூன் நாற்காலியில் அப்பாவின் நண்பர் கே ,ஆர் .நாயர் என் கை பிடித்து ஏற்றி உட்கார வைப்பார்
” நான் பார்த்துக்கறேன் சாரே நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க” என்று லக்ஸ் வாசம் வீசும் ஒரு மாபெரும் வெள்ளைத்துணியில் என் தலை மட்டும் தெரியும் படியாக போர்த்தி, போடுகிற முடிச்சு என் கழுத்தை இறுக்காதபடி ஊதுபத்தி வாசனை வீசும் தன் நீண்ட விரலினால் கழுத்தைச் சுற்றி துளாவிவிட்டு எங்களைப் பார்த்து புன்னகைப்பார்

அப்பா போய்விட காத்திருக்க வேண்டிய நேரம் எனக்கு பழகிபோனதொன்று. .எதிரே இருக்கிற குட்டி குரா பவுடர், சிறிய வாழைப்பழ அளவில் இருக்கிற படிகாரம் , செவேனோ க்ளாக் பிளைடுகள்,நீர் கலந்த மோர் போல பாட்டிலில் இருக்கும் வினோத வாசனைத் தண்ணீர் எல்லாம் பார்த்து சலித்து , மறுபடியுமாக எதிர் கண்ணாடியில் தெரியும் இந்திய தேசபக்தி படங்களை நேதாஜியை , பட்டேலை மற்றும் தலைவர்களை தரிசித்து முடியும் பொழுது நாயர் வெண் சட்டை வெண் வேஷ்டி யுடன் ஒரு தலைமை ஆசிரியர் தொனியில்
” நேரமாயிடுச்சா தம்பி” என்று கனத்த குரலில்.

அருகில் நிற்பார் .”.உனக்கு புடிச்ச மாதிரி வெட்டிடலாம்” என்பார்
.இது ஒரு தொழில்முறைப் பொய் என்பது எனக்குத் தெரிந்திருந்தது அரை இஞ்சுக்கு மேல் முடி இருக்கக் கூடாது என்று சொல்லும் அப்பாவின் வார்த்தைகளை இம்மி பிசகாமல் செய்ப்பவர் அவர். நானோ தலை வெட்ட காத்திருக்கும் ஆட்டின் முகபாவத்தில் தலையை ஆட்டுவேன்.

எது எனக்கு வளருமோ வளராதோ தலை முடியும் , நகங்களும் அபாரமாய் வளரும் .ஒரு செழித்த சுதந்திரமான புதர்ச் செடி போல் தலை மேல் கவிழ்ந்திருந்து, இதோ சடுதியில் வெட்டப்பட்டு கீழ் விழப்போகும் முடிக்கற்றைகளை ஏக்கமாய் என் பின்னிருக்கும் கண்ணாடியில் ஏக்கத்துடன் பார்த்திருப்பேன் .

நாயர் என் தலை முடிக்குள் எதையோ தேடுவது போல தன் விரல்களால் அலசி பின் கண்டறிந்த பாவனையில் ” குட்டிப் பையா கோவமானும் ஒனக்கு ரெட்டைச் சுழி அதனால் கவனமாயிட் டுண்டு வெட்டணும் மனசிலாச்சோ ” என்பார் ரகசியமான குரலில் வேறு யாரும் கேட்டுவிடக் கூடாது என்கிறமாதிரி.
கையறு நிலையில் முகத்தை இன்னும் இறுக்கிக் கொள்வேன். வெட்டுவது கூட பிரச்சினை இல்லை. கத்தரிக்கோலால்கடகடவென்று வெட்டி விடலாம்தான்.என்று சுலபமாக மனதில் தோணும் .ஆனால் நாயரோ ஏதோ தங்கக்கத்தரிக் கோலை பயன்படுத்துவது போல மிக பவ்யமாய் எடுத்து சோதனை செய்வதை போல மிக மெதுவாக அசைத்துப் பார்த்துவிட்டு தலையைச் சுற்றி ஒரு பறவை பறப்பது போல அவர் கையின் கத்தரி கடகடவென்று அசையும்.

பறவை இரையை பார்த்ததும் சட்டென்று இறங்கி கவ்வி எடுப்பதைப் போல என் தலை முடிக்குள் இறங்கி வாயில் ஒரு கற்றையுடன் மேலேறி அதை அந்த என் வெள்ளைப் போர்வை மேல் உதிர்க்கும் .வெண்ணிறமாய் வெந்நிறமாய் இருந்தது கருப்பு வெள்ளையுமுமான புது டிசைன்கள் உருவாகிகொண்டே இருப்பது இந்த சோகத்திலும் சற்று பிடித்த விஷயம்.

சுவரின் சில்லு சிதலங்களில் முகங்கள் உருவங்கள் பார்த்து பழகின மனதுக்கு விதவித உருவங்கள் நகர்ந்து நெளியும் என்னைச் சுற்றிலும்.

ஒரு சித்திரக்காரன் உட்கார்ந்து கொண்டு துணியில் கருப்பு பென்சிலில் தீட்டுவதாக மயங்கிக் கொண்டிருக்க நாயர் அந்த மோனத்தை கலைப்பதைப்போல என் கன்னத்தைத் தட்டி ” குட்டி பையனுக்கு ஒறக்கமோ ” என்று போத்தியிருந்த துணியை அவிழ்த்து படாற்படடாரென்று உதறி அதன் ஓவியத்தீற்றலைகள் தரைக்கு பரிசளித்துவிட்டு மறுபடியுமாய் எனக்குப் போர்த்தி தன் புன்னகையை மீண்டும் என் மேல் நழுவவிடுவார்.

” சாரே வந்திடும் .இன்னும் சில நிமிஷம் ,அவ்வளவுதான் .சரியா ? ” என்பார்
.பயத்தில் தெரிகிற என் முகம் அப்பாவின் தாமதத்தினால் அல்ல .நாயர் எடுக்கிற ட்ரிம்மரால் தான் என்பது அவ்ருக்குப் புரியவே புரியாது .

நாயர் முடிவெட்டுகிறதில் நான் மிகவும் பயப்படுவது இதற்கு தான் .டிரிம்மரை எடுத்து அதை கரக் கரக் க்கென்று அழுத்திக்கொண்டு என் தலை மீது நகர்த்திக் கொண்டிருப்பார்
ஆயிரம் தேனீக்கள் பூச்சிகளை அதற்குள் நிரப்பினதை போல ஒரு அதீத சப்தங்கள் தலை எங்கும் நகர்ந்து நகர்ந்து போக நிமிஷங்கள் நீண்டு கொண்டே போக கண்களை இறுக மூடிக்கொள்வதைத்தவிர வேறு எதுவும் தோணினதே இல்லை.

அதுவும் ஒரு தருணத்தில் சில்லிட்ட அவர் விரல்கள் என் காது மடலை மூட காதிற்கு பின்பாக அது நகரும்போது வரும் நடுக்கம் எல்லா முறையும் வெளிப்பட “அஞ்ச வேண்டாம் குட்டி ” என்பார் .ஒரு வழியாக அது முடிந்ததும்  உச்ச கட்டம் போல வில்லனின் முகபாவத்தில் ஒரு பிளேடை உடைத்து சவர்க் கத்தி ஒன்றில் செருகி  ” பையா அசைய வேண்டா புரியுதோ ” என்று நெருங்கினதும் என்னால் நடுக்கத்தை அடக்க சிரமப் பட வேண்டியதாயிருந்தது,

இன்னும் கண்களை மூடி கொள்ள பின் கழுத்திலும் காதருகில் அவர் சரக் சரக் கிட அந்தக் கருக் கருக் நிமிடங்கள் ஒரு வழியாக முடிந்ததும் ..” முடிஞ்சது குட்டி பையா ” என்று அறிவித்து படிகாரத்தை எடுத்து கழுத்து எல்லாம் ஜில்லென்று தடவி நான் சமாளிப்பதற்குள் குட்டி குரா பவுடர் கொட்டி கழுத்தில் அப்பி எடுத்து ” எப்பிடி ஜோரா இருக்கே பார் பையா “என போர்வையிலிருந்து விடுதலை செய்து விட சரியாக வருவார் .

அப்பா நிமிர்ந்து .கண்ணாடியில் பார்க்கும்போது முடி தலை வழிய இருந்த முகம் தொலைந்து போனது போல மொட்டையாக எங்கோ.என்றோ பார்த்த என் முகம் நிலைக் கண்ணாடியில் தெரிய அப்பா முன் அழுவதற்கு  தோணாமல் மௌனமாய் அவர் கை பிடித்தபடி நடந்திருக்கிறேன்.

இப்போதோ தலை நிறைய ததும்பும் முடி வழிய நிற்கும் குட்டி இளவரசிக்கு கடும் வெய்யிலை முன்னிட்டு முடி வெட்டுவதென்று சபையில் ஏகமாய் தீர்மானம் நிறைவேற்றி அவளிடம் சொல்ல முடியவே முடியாதென்று சொல்ல அவள் அப்பாவும் தன வீட்டோ வை பயன்படுத்தி அவளுக்கு ஆதரவு தர …..
காலங்கள் மாறிவிட்டது எத்தனையோ விதமாக…

 

  • கார்த்திகா ராஜ்குமார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!