உலகம்

இலங்கை ஐஸ் போதைப்பொருள் – ஒரே வாரத்தில் ரூ. 128 கோடி மதிப்புள்ள பாக்கெட்டுகள் பறிமுதல்

119views

லங்கையில் கடந்த காலங்களில் ஐஸ் போதைப்பொருள் அதிகளவில் பறிமுதல் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.

கடந்த ஒரு வார காலமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 128 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள சுமார் 128 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் இரண்டு பெண்கள் உள்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறினார்.

கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை பகுதியில் கடந்த 10ஆம் தேதி 113 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 101 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு புறநகர் பகுதியான ஜா-எல பகுதியில் 15 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மொத்தம் 7 சந்தேக நபர்களிடமும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, ஐஸ் போதைப்பொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலையொன்றை கைப்பற்றுவதற்கான இயலுமை போலீஸாருக்கு கிடைத்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

பின்னர் கடந்த 12ம் தேதி கொழும்பு புறநகர் பகுதியான சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக 110 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 5 சந்தேக நபர்களை போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இன்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து 2.433 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 128 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயில் தலைமறைவாகியுள்ள நிபுண என்ற நபரினாலேயே, இந்த போதைப்பொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், இந்த போதைப்பொருளை நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் ருபன் மற்றும் லால் என்ற இருவரே செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!