380
Teddy(டெடி)-திரை விமர்சனம்.
தற்போது OTT தளத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம்.
இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தமிழுக்கு ஒரு வித்தியாசமான விருவிருப்பான சுவாரஸ்யமான புதிய முயற்சியாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
இது நம்ப முடியுமா சாத்தியமா என்ற கேள்விகளை மீறி நம்மை ரசிக்கவும் படத்துடனே நம்மை பயணிக்கவும் வைக்கிறது.
இது திகில் படமா அமானுஷ்யமா அறிவியல் படமா ஆக்ஷன் படமா பொழுது போக்குப் படமா துப்பறியும் படமா என்றால் அத்தனைக்கும் ஆம் என்ற ஒற்றை பதிலைச் சொல்லலாம்.
அந்த வகையில் தமிழில் ஒரு பொம்மையை படம் நெடுக உயிருள்ள பாத்திரமாகவே பார்க்கும் ரசிகர்களை நம்ப வைத்து அதனுடனே பயணிக்க வைத்த முதல் தமிழ்ப்படம் என்று சொல்லலாம்.
நடக்கும் பேசும் நடனமாடும் நட்பு செய்யும் ஒரு பொம்மையை நிச்சயம் குழந்தைகள்
விரும்புவார்கள்.
ஆர்யா ,சிவா என்ற பாத்திரத்தில் கச்சிதமாக இயங்கி இருக்கிறார். நிறைய புத்தகங்கள் படித்து எதையும் ஒரு முறை படித்தால் அப்படியே நினைவில் கொள்ளும் திறைமை சாலியை எதோ மனநிலை பாதிக்கப்பட்ட வர்போல் சித்தரித்திரிக்கப் பட்டிருக்கிறது..
உடலைப் பிரிந்த ஆன்மா ஒரு பொம்மைக்குள் புகுந்து தன்னைத்தானே வெளியில் இருந்து பார்க்கும் அனுபவத்தை (Out of body experience) கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
மருத்துவத் துறையில் ஒரு மாபெரும் சர்வதேச ஊழலை கதாநாயகன் சிவா தான் நேசிக்கும், பொம்மை வடிவில் தன்னோடு நெருங்கி விட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு எப்படி அந்த மிக மோசமான ஊழலை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி தன் காதலையும் மீட்கிறார் என்பதை அழகாக சுவாரஸ்யமான விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
கரடி பொம்மை உள்ளே ஒருவர் இருந்து நடிக்கிறார் என்ற உணர்வை அறவே மறந்து பொம்மையின் விளையாட்டுத் தனத்தையும் சாகசங்களையும் ரசிக்க வைத்திருப்பது தமிழுக்கு புதிய முயற்சி. நம் வீட்டில் அந்த Teddy பொம்மை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை நினைக்க வைத்திருக்கும் படம்.
சாக்ஷி அகர்வால் மனநல மருத்துவராக கொஞ்ச நேரம் வந்தாலும் கச்சிதமாய் செய்திருக்கிறார்.
இமான் இசையில் எப்போதோ வெளிவந்துவிட்ட “என் இனிய தனிமையே” அழகான மனதுக்கு இதமான பாடல்.
சண்டைக் காட்சிகளில் அலிபாபா காலத்து பின்னணி இசை காட்சியை அன்னியப் படுத்துகிறது.
தொடர் பின் தொடர்தல் தொடர் சண்டை காட்சிகள் துப்பாக்கி சூடு எல்லாம் கொஞ்சம் சலிப்படைய வைக்கிறது.
அடுத்தடுத்த காட்சிகளை ரசிகர்கள் சுலபமாக யூகிக்க முடிகிறது.
கோமா நிலையில் ஒருவர் இருக்கும் போது ஆன்மா சந்தோஷமா பொம்மைக்குள் புகுந்து ஊர் சுற்றுகிறது தான் எங்கே இருக்கிறோம் என்ன நேர்கிறது என்பது மட்டும் அந்த ஆன்மாவிற்கு தெரியவில்லை..கதாநாயகனுக்கு தானே அறிவுப் பூர்வமான சாகசங்கள் செய்ய முடியும்.அந்த விதியை மீறமுடியுமா.
சாயிஷா முதல் காட்சியிலும் இறுதிக் காட்சியிலும் மட்டுமே வந்தாலும் ஆர்யாவின் துணைவி அழகாய் தன் பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார்.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் டெடிக்கு குரல் கொடுத்தவர் நடித்தவர் இவர்களை எழுந்து நின்று பாராட்டலாம்.
லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம்.
- தேன்மொழி தேவி