24views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
தேசமெங்கும் கைவீசி நடந்த
ஒரு கருப்புத் தாமரை
கண்ணயர்ந்திருக்கிறது…
மதுரை சங்கத்தமிழ் பாட்டு
தன் இசையை
முடித்துக் கொண்டிருக்கிறது…
காட்சிக்கு எளியனாகி
கடுஞ்சொல் இல்லனாகி
வாழ்ந்த
ஒரு கம்பீரத் தமிழனின்
கந்தர்வத் தமிழ்
களைப்புற்று இருக்கிறது…
சாலமன் பாப்பையா…
சிலுவைக் குறியிட்ட
தமிழின் போப்பையா…
அவர் கண்ணனின்
கருப்பு வண்ணம்…
மதுரை மீனாட்சி அம்மனின்
செந்தூரக் குங்குமம்…
இஸ்லாமியத் தோழமைகளின்
எடுப்பான தொப்பி…
மும்மதமும் கடந்தவர்
மக்கள் மனங்களைத்
தமிழால் அளந்தவர்…
அவர் பேச்சில்
அடுக்குமொழி துடுக்குமொழி
இல்லாமல் இருக்கலாம்…
ஆனால் குடும்பத்துக்கு தேவையான
அன்பு மொழி இன்ப மொழி
இருக்கும்…
அதிரடிகள் சரவெடிகள்
இல்லாமல் போகலாம்
ஆலயத்து மணியோசை போல்
அனைவருக்கும்
அது இசைக்கும்…
அவர் எட்டி நடந்த
தமிழக ஊர்களின்
பட்டி தொட்டிகள் எல்லாம்
கொடிகட்டி வந்தது பட்டிமன்றம்…
அது அரபு நாட்டில் இருந்து பார்த்தாலும் தெரியும்…
மதுரை
சிக்கந்தர் தர்கா குன்றம்…
அவர் தலைக்கு
அதுதான் பாகை…
கொண்டு வந்ததெல்லாம் வெற்றி வாகை…
மாமன்றங்களில் மாலைகள் சூடியவர்…
கல்யாணக் காலைகளிலும் மாலைகளிலும்
கவிதைகள் பாடியவர்…
அமெரிக்கக் கல்லூரியின்
தமிழ் மரபு வேட்டி…
அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று பறந்தாலும்
அனைவருக்கும் தருவார்
தமிழமுது ஊட்டி…
அதை
சொல்லாமல் சொல்லும்
அவரது பல பேட்டி…
பட்டிமன்றங்களுக்கு
பட்டுக்கம்பளம் விரித்தவர்…
சிந்தையில் பல
சிந்தனைகளைக் கிளறி
கருப்புப்பிறை போல் சிரித்தவர்…
ஆழ்ந்த அனுபவம் கொண்ட
ஆயிரம் காலத்து முதுபிறை
அவர் தீர்ப்பில்
எவரும் கண்டதில்லை ஒரு குறை…
பட்டிமன்றங்களின்
கலகலப்பு இருக்கும் வரை
அவர் கனிந்த தமிழின் கருத்துரையும்
இருக்கும்… இனிக்கும்.
add a comment






