தமிழகம்

எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய குழந்தைப்பாடல்கள் நூல் தமிழ்வழி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது

52views
உலகப்புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளரும், கனடாவில் இலக்கியத்திற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவரும் மற்றும் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவருமான எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள், உலகெங்கும் இருக்கும் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ் மொழியறிவை வளர்த்தெடுக்கும் நோக்கில், பல சிறப்புமிக்க செயல்பாடுகளைப் பல்லாண்டுகளாக முன்னெடுத்துச் செய்துவருபவர்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கலைமகள், கணையாழி உள்ளிட்ட தமிழ் இதழ்களில் நாவல், குறுநாவல், சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.  இவரது படைப்புகள் இலங்கை, கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் இதழ்களில் வெளியாகியுள்ளன.
இன்றைய தலைமுறை தமிழ்க் குழந்தைகளிடம் தாய்மொழியாம் தமிழைக் கொண்டுசேர்க்கும் நோக்கில், ‘தமிழ் ஆரம்’ எனும் சிறு குழந்தைகளுக்கான அழகிய பாடல் நூலொன்றினை எழுதியுள்ளார். இந்நூலிலுள்ள எளிய பாடல்களைக் குழந்தைகள் ஆர்வத்துடன் படித்து, ஆடிப்பாடும் வகையில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலினைக் குரு அரவிந்தன் வாசகர் வட்டமும், அகநி வெளியீடும் இணைந்து வெளியிட்டுள்ளது.
நல்ல வழவழப்பான தாளில், பல வண்ணத்தில் வெளியாகியுள்ள இந்தத் ‘தமிழ் ஆரம்’ சிறுவர்கள் பாடல் நூல், இலங்கையிலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும், கனடாவிலுள்ள தமிழ்க் குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம், காந்தி நகரிலுள்ள பாவலரேறு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்தத் ‘தமிழ் ஆரம்’ சிறுவர் பாடல்கள் நூலோடு, எழுத்தாளர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘பழைய பாட்டியும் புது வடையும்’ எனும் சிறுவர் கதை நூலையும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளியின் தாளாளர் மனோகரன் வழங்கிச் சிறப்பித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!