54views
மாத்ருபூதேஸ்வரன்
இது ஒரு வித்தியாசமான நாயின் கதை.
நாய் மனிதர்களைவிட கூர்மையான கேட்கும் திறன் கொண்டது. நமது முகபாவனைகளையும் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் அதற்கு உண்டு. மனிதனைவிட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமான மோப்ப சக்தி கொண்டது. உலகம் முழுவதும் மூன்னூற்றுக்கும் மேற்பட்ட நாய் இனங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். செல்லப்பிராணிகளில் மிகவும் பிரபலமானதும் நாய்தான்.
ஆனால் மேலே சொன்ன தகவல்களுக்கும் இந்தக் கதைக்கும் பெரிய சம்பந்தம் ஒன்றும் இல்லை என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.
என்னுடைய நண்பனின் வீடு கிராமத்தில் பெரியதாக இருக்கும். வீட்டின் பின்புறம் விசாலமான காலி இடம். அங்கே நிறைய மாடுகளை கட்டி வைத்திருப்பார்கள். வயல்வெளிகளும் இருந்தன. ஊருக்கு வெளியே இருக்கும் அந்த வயல்களில் நெல், கடலை போன்ற பயிர்களை பயிரிட்டு வந்தார்கள். மாடுகளுக்காக வைக்கோல் போர் பின்புறம் மலையாக குவிந்திருக்கும்.
அந்த இடத்தைச் சுற்றி மதில் சுவர் கிடையாது. அதற்குப் பதிலாக முள்வேலி. ஆனால் முள்வேலி என்பது சில ஊழியரைப் போல — சில நாட்கள் வேலை பார்த்துவிட்டு சோர்ந்து விடும். அடிக்கடி புதிதாக போட வேண்டும். வேலியின் இடைவெளிகளைப் பயன்படுத்தி பன்றிகள் உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்யும். அவற்றை விரட்டுவது வீட்டாருக்கே ஒரு பெரிய போராட்டம்.
ஒருநாள் நண்பனின் அம்மா தீர்மானமாகச் சொன்னார்கள்:
“நாம் ஒரு நாயை வளர்ப்போம். அது பன்றிகளை விரட்டிவிடும். இந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.”
அப்போது நாங்கள் எல்லோரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம். என் நண்பர் மட்டும் படிப்பு முடித்து வீட்டிலேயே இருந்தார்.
அந்த சமயத்தில் மணி என்ற ஒருவர் வந்து,
“ஒரு கோம்பை நாய் குட்டி இருக்கு. ரொம்ப நல்ல ஜாதி,”
என்று சொல்லி கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு ஒரு நாய்க்குட்டியை கொடுத்துவிட்டு, அந்தப் பணத்துடன் நேராக சாராயக்கடைக்குச் சென்றுவிட்டார்.
என் நண்பர் அதை ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதி வீட்டிற்கு கொண்டு வந்தார்.
“இது கோம்பை இன நாய். பணம் கொடுத்து வாங்கினேன்,”
என்று பெருமையுடன் அறிவித்தார்.
நாய்க்குட்டி சிறியதாக, பஞ்சுபோல் அழகாக இருந்தது. வீட்டிலுள்ள எல்லோரும் அதற்கு கவனம் செலுத்தி வளர்க்க ஆரம்பித்தார்கள். நாங்களும் கல்லூரி முடிந்தவுடன் நண்பன் வீட்டுக்குச் சென்று அதனுடன் விளையாடிக் கொண்டிருப்போம்.
நாட்கள் நகர்ந்தன.
ஆனால் நாயின் உடலமைப்பும் நடத்தையும் பார்த்தபோது, அது கோம்பை நாயைப் போல எங்கும் தெரியவில்லை. சாதாரண தெருநாய் மாதிரி தான் இருந்தது. அப்போது தான் எல்லோருக்கும் உண்மை புரிந்தது — மணி, சாராயத்திற்காக நண்பனை ஏமாற்றி பணம் பறித்துவிட்டார்.
வீட்டிலுள்ள எல்லோரும் நண்பரை திட்ட ஆரம்பித்தார்கள்.
“உன்ன மாதிரி ஏமாளி வேற யாரும் இருக்க முடியாது!”
நாங்கள் அருகில் நின்று சிரித்துக் கொண்டிருந்தோம்.
இருப்பினும், “நாயை வளர்ப்பது பன்றிகளை விரட்டத்தானே?” என்று வீட்டார் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.
நாயும் நன்றாக வளர்ந்தது. எங்களைப் பார்த்தாலே வாலாட்டும். நக்கி விளையாடும். நாங்களும் அதைப் பார்த்து மகிழ்ந்தோம்.
ஆனால் ஒரு விசித்திரம் இருந்தது.
அந்த நாய் எல்லோரிடமும் அன்பாக இருந்தாலும், என் நண்பரை மட்டும் பார்த்தால் சில சமயங்களில் காரணமே இல்லாமல் குரைக்கும். நண்பருக்கு அது அவமானமாக இருந்தாலும், எங்களுக்கு அது தினசரி நகைச்சுவை நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
ஆனால் உண்மையான சோகம் இனிதான்.
நாயை பன்றிகளை விரட்டுமாறு பழக்கப்படுத்த ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் அது இரண்டு மூன்று முறை ஓடியது. வீட்டார் நிம்மதியடைந்தார்கள்.
ஆனால் சில நாட்களில் நடந்த மாற்றம் வரலாற்றிலேயே இடம் பெற வேண்டியது.
பன்றிகள் வீட்டு பின்பக்கம் வந்தால், நாய் அவற்றை விரட்டவில்லை.
மாறாக, வாலாட்டிக் கொண்டு அவற்றுடன் விளையாட ஆரம்பித்தது!
ஒருபுறம் பன்றிகள் வைக்கோலை இழுத்துக் கொண்டிருக்கும். மறுபுறம் நாய் மகிழ்ச்சியாக அவற்றைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும்.
அதைப் பார்த்த நண்பனின் முகத்தில் தோன்றிய வேதனை, தேர்வில் அரியர் வந்த மாணவனுடைய முகத்தைவிட ஆழமாக இருந்தது.
இதற்குப் பிறகு வீட்டில் யாராவது கோபப்பட்டால்,
“ஒரு தண்டச்சோறு போதாதுன்னு நினைச்சோம்… இப்ப இரண்டு தண்டச்சோறு ஆயிடுச்சு!”
என்று நண்பரையும் நாயையும் சேர்த்து திட்ட ஆரம்பித்தார்கள்.
வேலை இல்லாமல் வீட்டில் இருந்த நண்பருக்கும், வேலை செய்யாமல் சாப்பிட்டு தூங்கிய நாயுக்கும் இடையே அப்போது ஒரு ஆழமான உறவு உருவாகி விட்டது.
பன்றிகளை விரட்ட வாங்கிய நாய், பன்றிகளுக்கே நண்பனாக மாறிவிட்டது.
add a comment






