சிறுகதை

அம்மாச்சியும், ஐந்து சாக்லேட்டுகளும்.!

91views
சி.பூவேந்தன்
என் மூத்தார் வீட்டு வாசலில் காலடி எடுத்து வைக்கும் போதே, அந்த நாலஞ்சு குட்டிப் பிசாசுகளின் சத்தம் தெருவை ரகளையாக்கிக் கொண்டிருந்தது.
எல்லாம் உழக்கு சைசுதான். ஆனால், போடும் சத்தம் என்னவோ இடி முழக்கம் போல இருக்கும்.
வாசலில் நின்றபடியே பைக்குள் கையை விட்டு, நான் முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கி வைத்திருந்த ஐந்து பெரிய சாக்லேட்டுகளையும், பளபளக்கும் பொம்மைகளையும் (விளையாட்டுப் பொருட்கள்) வெளியே எடுத்தேன்.
அவர்களை பார்த்து “டேய்… இங்க பாருங்க, யாரு வந்திருக்கா?” என்று நான் குரல் கொடுத்ததும், ஓடி விளையாடிக் கொண்டிருந்த ஐந்து ஜோடிக் கண்களும் என் கை மேல் விழுந்தன.
விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தன வாண்டுப் பிள்ளைகள்.
சாக்லேட்டை நீட்டுவதற்கு முன், நான் என் முகத்தில் ஒரு ‘மாடர்ன்’ புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “இதோ பாருங்க… இதெல்லாம் உங்களுக்குத்தான். ஆனா, ஒரு கண்டிஷன்! என்னை இனிமே யாரும் ‘அம்மாச்சி’ன்னு கூப்பிடக் கூடாது. ‘ஆன்ட்டி’ன்னு தான் கூப்பிடணும். ஓகேவா?” என்று நைஸாக டீல் பேசினேன்.
சற்றே வயதான என் தோற்றத்தை ஒத்துக் கொள்ள மனமில்லாத, நகரத்து நாகரிகத் தவிப்புதான் அது.
பெரிய சாக்லேட்டைப் பார்த்ததும், ஐந்து பேருக்கும் கண்கள் பளபளத்தன.
“ஓகே ஆன்ட்டி… தேங்க் யூ ஆன்ட்டி!” என்று கோரஸாகச் சொல்லிவிட்டு, சாக்லேட்டுகளையும் பொம்மைகளையும் பிடுங்கிக் கொண்டு ஓடினார்கள்.
அப்பாடா, காரியம் சாதிச்சாச்சு என்று எனக்குள் ஒரு பெருமிதம் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.
அதற்குள் சாக்லேட் தீர்ந்ததும் அங்கே அரங்கேறியது க்ளைமாக்ஸ்!
ஆம்..அந்தப் வெற்றிப் பெருமிதம் அடுத்த அரை மணி நேரத்திற்கு மேல் நீடிக்கவில்லை.
சாக்லேட் கவர்கள் கிழிக்கப்பட்டு, வாயிலும் கைகளிலும் சாக்லேட் நதிகள் ஓடி முடிந்து, பொம்மைகளும் கொஞ்சம் பழையதான அந்த வினாடி வந்தது.
ஒரு குட்டிப் பையன் வேகமாக என் மடியில் வந்து அமர்ந்தான். அவன் வாயைச் சுற்றிலும் சாக்லேட் அப்பியிருந்தது.
“ஆன்ட்டி… அடுத்து என்ன விளையாட்டு விளையாடலாம்?” என்று கேட்பான் என்று நான் எதிர்பார்த்துக் காத்திருக்க, அவன் என் முகத்தைப் பார்த்து மிகத் தீர்க்கமாகச் சொன்னான்:  “அம்மாச்சி… சாக்லேட் தீந்து போச்சு. இன்னும் ஒண்ணு குடு!”
நான் அதிர்ந்து போய், “அடேய்… இப்பதானே ஆன்ட்டின்னு கூப்பிடணும்னு சொன்னேன்?” என்றேன்.
பக்கத்தில் இருந்த அடுத்த பக்கிப் புள்ள, பொம்மையை வீசி எறிந்துவிட்டு, “சாக்லேட் இருக்கும்போதுதான் நீங்க ஆன்ட்டி… அதுதான் நாங்க சாப்ட்டாச்சே அப்போ இனிமே நீ எங்க அம்மாச்சிதான் போ!” என்று நக்கலாகச் சிரித்துவிட்டு ஓடியது.
எல்லா சாக்லேட்டும் காலி, என் ‘ஆன்ட்டி’ பட்டமும் காலி!
மழலைகளின் அந்த அசாத்தியமான உஷார்தனத்தைக் கண்டு எனக்குச் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. ‘குட்டிப் பிசாசுகள்… எவ்வளவு நைஸா ஏமாத்திருச்சுங்க’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
அன்று முழுக்க அவங்களோடுதான் இருந்தேன். அங்க சொன்ன கற்பனைக் கதைகள், அந்தப் பொம்மைக்கார்களின் விபத்துக்கள், அக்கா அடித்தாள் என்று தம்பியிடம் போட்ட பொய்க் கோபங்கள்… என மழலை உலகத்தின் கதைகளைக் கேட்டுக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து, இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அமைதிக்குள் நுழைந்து இரண்டு நாட்களாகிவிட்டன.
இங்கே சுற்றிலும் அமைதி இருக்கிறது, ஆனால் அந்த ஐந்து பேரின் சத்தமும், சாக்லேட் தீர்ந்ததும் என்னை ‘அம்மாச்சி’ என்று கூப்பிட்ட அந்தப் பாசமான மழலைகளின் ஏமாற்று வேலைகளும் என் மனதை விட்டுப் போகவே இல்லை.
அடுக்குமாடி குடியிருப்பில் அமர்ந்து காபி குடித்தாலும், நினைப்பெல்லாம் அந்த உழக்கு சைஸ் பேரப்பிள்ளைகளின் சிரிப்பில்தான் இருக்கிறது என் உலகம்.
குழந்தைகள் உலகம் அவ்ளோ இனிமை… அதில் நாமும் கொஞ்சம் குழந்தையாகித் தொலைவதில்தான் எத்தனை சுகம்!

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!