சிறுகதை

மீகாமன்

224views
“என்னங்க! இந்த ரோட்டைப் பார்த்தீங்களா? பளபளன்னு என்னமா பாலிஷ் பண்ணி வச்ச்சிருக்காங்க பாருங்க! இப்படித்தான் எல்லா ரோடும் இருக்குமாங்க, குஜராத்தில? அதனாலதான், ஒரு அலுங்கல், குலுங்கல் இல்லாம, பஸ் போறதைப் பாருங்க!” தன்னுடைய கணவரிடம் சற்று சத்தமாகவே, உற்சாகத்துடன் கதைத்துக் கொண்டிருந்தாள் அந்த வயதான பெண்மணி.
அவளும், அவளின் கணவரும் வயதில் மிகவும் மூத்தவர்களாகத் தெரிந்தார்கள். கடந்த மூன்று நாட்களாக, தனியார் சுற்றுலா ஏஜன்ஸி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த குஜராத் சுற்றுலாப் பேருந்தில், நானும் கவனித்து வந்திருக்கிறேன், அந்த இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாகவும், சளைக்காமல் தங்களுக்குள் பேசிக் கொள்வதையும், வயதின் காரணமாக நடக்கும் வேகம் குறைந்திருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும், தவறாமல் முக்கி முனகியபடி இறங்கி, மெதுவாக சுற்றிப் பார்த்துவிட்டு, அவர்கள் வருவதையும் கவனித்திருக்கிறேன்.
பாதிபேர் பகல் உணவுக்குப் பின் லேசான மயக்கத்தில் தலைகள் ஆடிக்கொண்டிருந்த வேளையில், அவர்கள் உட்கார்ந்திருந்த இரண்டு வரிசைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த நான், இவர்களின் உற்சாகத்தையும், களைப்பினால் சற்று கண்ணயரலாம் என்ற நினைப்பே இல்லாமல், பார்த்துவிட்டு வந்த தலங்களைப் பற்றியும், பார்க்கப்போகிற கோயில்களின் வரலாற்றைப் பற்றியும், விடாமல் பேசிக் கொண்டே வந்த அந்த ‘இளஞ்சோடிகளை’ ஆச்சரியமாகப் பார்த்தேன்.  இப்படித்தான் என் கடைக்குட்டி மகளும் பள்ளிக்கு காரில் செல்லும்போது, ஏதாவது, மூச்சிரைத்தபடி பேசிக் கொண்டே வருவாள். கூடவே வரும் என்னுடைய பையன்- கடைக்குட்டி மகளைவிட நான்கு வயது பெரியவன்- அமைதியாய், ஒன்றுமே காதில் விழாதவனாய், பாடப் புத்தகம் ஒன்றில் மூழ்கி போயிருப்பான்.
இரண்டு பேருக்கும் இடையே, இந்த முரண்பாட்டைக் கண்டு அதிசயத்திருப்பேன்! என்னைப் போலவே அவனும் யாரிடமும் அதிகமாய் ஒட்டாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். ஆனால், என் கடைக்குட்டிச் செல்லத்திற்கு பேசத் திறந்தால் வாய் மூடத் தெரியாது! அவள் அப்படியே அவளுடைய அம்மாவைப் போல.. ஒரு வெப்பமான, வலி மிகுந்த பெருமூச்சு என்னுள் எழுந்தது.

இப்போது அவர்கள் இருவரும் பதின் வயதைத் தாண்டி, கல்லூரிப் படிப்பு முடித்து, வேலைக்குச் சென்று வருகிறார்கள். குழந்தைப் பருவம் கடந்தவுடனே, ஒவ்வொரு விஷயத்திற்கும் என்னையே அவர்கள் நம்பியிருந்த நிலைமாறி, தன்காலில் தான் நின்றவுடனே, தாய், தந்தையின் அவசியம் மிகவும் குறைந்து போய், அவர்கள் வேலை, வேலை என்றலைந்து, ஒவ்வொருநாளும் பதினைந்து, பதினெட்டு மணி நேரம், வீட்டை மறந்து, ஏதோவொரு மாய உலகில், துரத்துபவர் யார் என்றே தெரியாமல், வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
இவர்களை இப்படி செக்குமாடுகளாய் ஆக்கியதில், பெரும் பங்கு என் மனைவியையே சாரும். கனடியப் பிரஜையான அவள், வெகுளிப் பையனாய், புதுவை மாநகரில் நான் சுற்றிக் கொண்டிருந்த போது, கர்நாடக இசைக்கல்லூரியி்ல், மாணவியாக ஸ்காலர்ஷிப்பில் அவள் சேர்ந்த போது தான், எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு- அது, காதலாகி, கசிந்துருகி, மணமாலையில் கொண்டு போய்விட்டது. அதற்குப்பின், நான் கனடிய குடியுரிமை பெற்று தொரந்தோ (Toronto) நகரில், எனக்குப் பிடித்த இசைக் கல்லூரியில், இந்திய இசையை கற்பிக்கும் ஆசிரியனாக நான் சேர, கணிணி பொறியாளராக அவள் பெரிய வங்கியில் சேர, எங்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பமானது.
என்னுடைய இல்லத்தரசிக்கு வேலையே வாழ்க்கை, வாழ்வதே வேலைக்கு என்று ஓடுபவள். காலை ஏழுமணிக்கு வெளியே சென்றாள் என்றால், இரவு ஒன்பது மணி, இல்லை, ஒவ்வொரு நாள் நள்ளிரவு, இல்லை முதுஇரவின் இரண்டு, மூன்று மணிக்குக் கூட வீட்டிற்கு வருவாள். என்னுடைய வேலை அப்படி அல்ல 9-5 ஜாப் தான். அதிலும் சில நாள் வேகமாக காற்றும் மழையும் பெய்துவிட்டால், ஆன்லைன் கிளாஸ்கள் தாம்.
அதனால், என்னுடைய அடிப்படைக் கடமையாக, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளும் பொன்னான வேலையை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். அவர்களைக் காலையில் எழுப்பி, காலை உணவைத் தயாரித்து, அவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பள்ளியிலிருந்து மாலை வீட்டிற்கு அழைத்து வந்து, இரவு உணவு தயாரித்து அவர்களை தூங்கவைக்கும் நேரம் வரை அவர்களோடே கழிந்த அந்தப் பாசமிகு நாட்களை நினைத்துக் கொண்டேன், கண்ணிமைகள் வேர்த்தன.
அவர்கள் பதின் வயதடைந்ததும், காட்சிகள் மாறத் தொடங்கின. அந்நாட்டு கலாசார முறைப்படி, பதினைந்து வயதெட்டியதும், குழந்தைகள் படித்துக் கொண்டே வேலைகள் பார்ப்பதும், பெற்றோரை விட்டு தனியாக நண்பர்களோடு தங்கி, தத்தம் வாழ்க்கையில் முன்னேற தங்களின் முழுநேரத்தையும் செலவிடுவதுமென அவர்கள் இருவரும் , அதிசிரத்தையாய் நான் பார்த்துப் பார்த்துக் கட்டியப் பாசக் கூட்டை மறந்துவிட்டு, வெளியேறினார்கள். அதற்கு என் மனைவியும் அவர்களுக்கு ஆதரவாய் நிற்க, நான் தனித்து விடப்பட்டேன்.
ஒவ்வொரு நாளும், வெறிச்சோடிய நீச்சல்குளமும், பந்துவிளையாடிய வீட்டுத்தோட்டமும், பதினைந்து பேர்கள் வாழக்கூடிய பெரிய வீட்டில் வெறுமையும் குடிகொள்ள, நான் தனித்துவிடப்பட்டேன்! என் மனைவி வழக்கம்போல ஓடிக் கொண்டேயிருந்தாள்.. என்னுடைய பிள்ளைகள் என்னுடனே உணவருந்துவதற்குக் கூட வாரத்தில் ஒரு நாளிரவு தான் ஒதுக்குவார்கள். அதிலும் சில நாட்கள் அவர்களின் வேலைப் பளு காரணமாக அந்த நிகழ்வும் தள்ளிப் போடப்படும்.
இப்படியே, என்னுடைய நாட்கள் நரகமாய் நகர்ந்தன! வாழ்வதன் அர்த்தமும், அவசியமும் தெரியாத, தெரிந்து கொள்ள முற்படாத ஒரு சமுதாயம் அங்கே ஓடிக் கொண்டே இருந்தது. அதனால், அந்தக் கானல் உலகைவிட்டு, நான் புதுவைக்குத் திரும்ப குடி பெயர்ந்துவிட்டேன். இப்படியே, ஏழு வருடங்கள் ஓடிவிட்டன!
திடீரென வண்டி நின்று, ஒரு குலுக்கலுடன் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கியது. நான் என் நினைவுச் சங்கிலியை அறுத்துவிட்டு வெளியே வந்தேன். என் முன்னால் அந்தப் பெரியவர் என்னைப் பார்த்தபடி புன்னகைத்துக் கொண்டிருந்தார். நான் உடனே, “பெரியவரே! ஏதாவது வேண்டுமா?” என்றேன்.
“உங்களுக்கு காபி வேண்டுமா? நல்ல பிஃல்டர் காபி! காலையிலேயே ரூமில போட்டுக் கொண்டாந்தது தம்பி! நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும்!” என்றார்.
நான் கூச்சத்துடன் “இல்லை வேண்டாம் சார். இப்போதானே மதிய உணவு சாப்பிட்டேன். அதனால வேண்டாம். வயிறு புஃல்லா இருக்கு சார்” என்றேன்.
“என்னது மதிய உணவா? அதுதான் நாம ஹோட்டல்ல சாப்பிட்டு மூன்று மணிநேரம் ஆகுதே! இன்னும் அரை மணிநேரத்தில பேட் துவாரக்கா வந்திடும்! அதனால, இப்போ சூடா பிஃல்டர் காபி சாப்டா தெம்பா போய் கோயிலைச் சுத்திப் பார்க்கலாம். வாங்கோ! “ என்றழைத்தார்.
இதற்கு மேல் பிகு பண்ணாமல் அவர்களின் இருக்கையின் பக்கத்தில் வந்தமர்ந்தேன். மாமியைப்பார்த்து வணக்கம் சொன்னேன். வாஞ்சையோடு சிரித்தார், அவர். சுடச்சுட காபியை சிறிய எவர்சில்வர் டம்ளரில் ஊற்றி, பஸ்ஸின் குலுக்கலில், சிந்தாமல் கொடுத்தார். டிகாக்‌ஷன் காபியின் நிறமும், சிக்கரி பவுடரின் மணமும் சேர்ந்து கிறங்க அடித்தன.
“நான் ஆவுடையப்பன். இவள் என் பத்தினி தமயந்தி. திருநெல்வேலிக்குப் பக்கத்திலே அம்மையப்பன் கோயில் கிராமம். தனியார் ஷிப்பிங் கம்பெனியில் பொறியாளராக 35 வருடங்கள் வேலை செய்துவிட்டு 15 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவன். Glorious Diamond Jubilee! இவளை, பதினெட்டு வயசில, பத்தாம்கிளாஸ் பெஃயில் ஆகி வீட்டில் இருந்தவளோட கல்யாணம். எங்களுக்கு ஒரு பையன் -லண்டனில்,கம்ப்யூடர் என்ஜினியர் ஆக இருக்கான். இரண்டு செல்லப் பேரப்புள்ளைகள். பொண்ணு, இப்பத்தான் கல்யாணம் ஆகி, பாரீசுல செட்டில் ஆகியிருக்கா!  எங்களுக்கு வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கறது பிடிக்காது. நான் வேற மரைன் என்ஜினியர் ஆச்சே! அப்போ ஒண்டியா நாடுகளை சுத்தி வந்தேன். இப்போ இவ கூட இந்தியாவச் சுத்தி வரோம்” என்று சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தார்.
மாமி “காபில சக்கரை கொறவாத் தான் போடுவோம். உங்களுக்குப் பரவாயில்லையா?” எனக் கேட்டாள். “இல்லை மாமி! காபி நல்லா ஸ்ட்ராங்கா, அருமையா இருக்கு. சார் உங்க இரண்டு பேர்வயசுக்கு நீங்க பிள்ளைகளோட போய் தங்கி இருக்கலாமே! தனியா இருந்து ஏன் இப்படி கஷ்டப்படுறீங்க?” என்றேன்.
“ஹா! ஹா! கஷ்டமா? இப்பத்தான் நாங்க ரெண்டுபேரும் இளஞ்சோடிகளப் போல வலசைப் பறவைகளா உலகத்தை சுற்றி வரோம்! முன்னாடி எனக்கு டயம் கிடையாது, எந்த நாட்டுல எப்போ இருப்பேன் எப்போ திரும்பி வருவேன்னே தெரியாது. வீட்டையும், குழந்தைகளையும், உண்மையாகவே, இவ தான் பார்த்துப்பா! இப்போ தான் எங்களுக்கு டயம். வீட்லேயே அடைஞ்சு கிடந்தவள இப்போ தான், இந்தியா மட்டுமில்ல, உலகத்தையே சுத்தி காட்டிகிட்டு வரேன்.  ஆமாந் தம்பி. வருஷத்திலே, மவன் கூட மூணு மாசம், செல்ல மகள்கூட மூணு மாசம் இருப்போம். அப்புறம், மீதி ஆறு மாசம் எங்களுக்கானது. அதுல இப்போ இந்தியாவை சுத்தி வாரோம். அப்புறம் மத்த நாடுங்க!” என்று மீண்டும் பலமாகச் சிரித்தார்.
இந்த தள்ளாத வயதிலும், தனக்கென வாழும் நேரத்தையும், தன்னுடைய பிள்ளைகளுக்கான நேரத்தையும் ஒதுக்கி, வாழ்க்கையை இயல்பாகவும், மகிழ்ச்சியாகவும், மற்றவருக்கு உபயோகமாகவும், கழிக்கும் அவர்களைப் பார்த்து வியந்து போனேன்.

“போன வருஷந்தான் எங்களால எங்கயும் போக முடியல. மாமாவுக்கு பக்கவாதம் வந்து, மூணு மாசம் படுக்கையில விழுந்துட்டார். அதே நேரத்துல எனக்கு இரண்டாம் முறையா இதய ஆபரேஷன். ஒண்ணும் பிரச்னையில்லே. ஆஸ்பித்திரியிலே எங்கள நல்லா பார்த்து அனுப்பிச்சிட்டாங்க. என்ன, மின்னே இருந்த கொஞ்ச வேகம் இப்போ இன்னும் குறைஞ்சிட்டது” என்றாள் மாமி.
“அப்போ உங்க பசங்க யாரும் வந்து பார்த்துக்கலியா?” என்று கேட்டேன் நான். “இ்ல்லை தம்பி. அப்போ எங்க பொண்ணு மாசமா இருந்தா, பையனுக்கு அப்போ வேல போயிடுச்சு. வேற கம்பனில வேல கிடைச்சு ஜாயின் பண்ணாத்தான் விசா உயிரோடு இருக்கும். அதனால, அவனால வரமுடியல. அதனால என்ன? எனக்கு இவ இருக்கா, அவளுக்கு நான் இருக்கேனே, போதாதா?  ஆனா, அதேசமயம், நாங்க ஒவ்வொரு வருஷமும், தவறாம புள்ளைங்க கிட்ட போயிருவோம். எங்களால முடிஞ்ச உதவிகளச் செய்வோம். பொறந்த நாட்டோட தொப்புள்கொடி உறவை அவங்க மறந்துடக் கூடாதில்ல! அதுமட்டுமில்ல, அவுங்களுக்கு அப்பன், ஆத்தா என்கிற மீகாமன், ஆங்கிலத்துல கேப்டன்னு சொல்லுவாங்க இல்ல, அது மாதிரி நாங்க அவங்கள கவனிச்சிட்டு வரோம்னு அவங்களுக்கும் தெரியனும்ல. அவங்களுக்கு அப்படியொரு தார்மிக திசைகாட்டி -மாரல் காம்பஸ்- ஆக, நாங்க இல்லைன்னா, திசை தெரியாம இந்த பொல்லாத உலகத்துல தவிச்சுப்போய் சீரழிஞ்சிட மாட்டாங்க! அப்புறம், பேரப்புள்ளைங்க எங்களையும், நம்ம மொழியையும், தாய்நாட்டையும் மறந்துடக் கூடாதில்லப்பா. அதுக்காகவும் தான்!  என்ன தம்பி ! உங்களை போரடிக்கிறேனா? என்ன தமயந்தி! நான் போட்ட பிட்டுல தம்பிக்கு இன்னொரு கப் காபி தேவப்படும் போலத் தெரியுதே” என்று சொல்லிச் சிரித்தார்.
“உங்களுக்குன்னு வசமா வந்து வாய்ச்சார் தம்பி! ஆ! இதோ கோமதி ஆற்று ரோடு பிரிட்ஜ்! வந்திட்டுது! அடடா! என்ன அழகு! என்ன அழகு! இந்த நதி, என்ன சாந்தமா ஓடறது, பாருங்க!” என்றாள் மாமி. அவர்களிருவரும் சன்னல் வெளியே தலை நீட்டி ஆற்றை ரசிக்க, நான் மட்டும் அவர்கள் இருவரையும் விநோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சென்னை விமான நிலையம். சுற்றுலா முடிந்து, அனைவரும் ஆமதாபாத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பி, வெளிக்கதவுக்கருகில் வந்து கொண்டிருந்தோம். நான் அவர்களை நோக்கி, “ஐயா! நான் விடைபெறுகிறேன். தங்களோடு நான் நட்பு கொண்டதில் பெரு மகிழ்ச்சியும், நன்றியையும் கொண்டிருக்கிறேன்.” என்றேன்.
மாமா என்னைப் பார்த்து, “ தம்பி! நீ வெளியே வரலையா? டாக்சி பிடித்து பாண்டி போக வேண்டாமா?” என்றார்.
“இல்லை மாமா, நான் தொரந்தோவிற்கு டிக்கட் எடுத்துவிட்டேன். என் பிள்ளைகளை உடனே நான் பார்க்க வேண்டும். அவர்களோடு சில காலம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். கனடா பிஃளைட்க்கு இன்னும் ஆறுமணி நேரம் இருக்கு. எனக்கு ஆசி கூறுங்கள்” என்று அவர்கள் இருவரின் கால்களைத் தொட்டு வணங்கினேன்!”
“பலே! பலே! உனக்கு, வீட்டு ஞாபகம் வந்திட்டுதா? சந்தோஷம்பா! உன் குழந்தைகளோடயும், மனைவியோடயும் சந்தோஷமா, தீர்க்காயுசோட இருக்கனும். அப்புறம் எங்கள மறந்துடாதே! ஒரு முறை எங்கள் கிராமத்துக்கு அவசியம் வந்து எங்க கூட கொஞ்ச காலம் தங்கியிருக்கனும்.” என்றார்.
நன்றிப்பெருக்கில், என் கண்களில் நீர் கோர்த்தது. அவர்களை வணங்கி நின்றேன்.
பொ.வெ. இராஜகுமார்

2 Comments

  1. இன்றைய மூத்த குடிமக்கள் பெரும்பாலோர் நிலையை அப்பட்டமாக சித்தரித்துள்ளார் இன்றைய மூத்த தலைமுறையிர் பெரும்பாலோர் மனதில் நினைப்பதை அப்படியே சித்தரித்துள்ளார் கவிஞர். ராஜகுமார். அருமையான நடை .தம்பதிகட்கிடையே இழைந்தோடும் அந்த அன்பு பரிமாற்றம் இன்றைய தலைமுறையில் காண்பது அரிதே. கடைசியில் கனடாவுக்கு செல்கிறேன் என்று சொல்லி ஆசி பெறுவதாக முடித்ததை மிகவும் ரசித்தேன்.
    பாராட்டுக்கள்.
    அன்புடன்
    சக எழுத்தாளர் குட்டிபாலா என்ற
    Er.G.Krishnan.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!