சிறுகதை

அவனின் கனவு இவளின் நிலை

342views
கோவிலூர். கோவிலூர் என்ற பெயருக்கேற்றாற்போல் கோவில்கள் நிறைந்த ஊர். கோவிலுக்கு அருகாமையில் குளம், குளத்தை சுற்றி வீடுகள், எங்கும் பசுமை, விவசாயம் பயிரிடும் மக்கள், அமைதியான ஊர் என செழுமையாக இருந்தது.
சுருள் சுருளான தலைமுடியும், அடர்ந்த புருவமும், வசீகரிக்கும் கண்களும், சாந்தமான முகமும் கொண்ட இளைஞன் சுதன். நன்றாக பாடும் திறமைசாலியும் கூட. Jதினமும் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு பெண்ணை பார்க்கிறான் அவள் கண்களுக்கு கண்மை தீட்டவில்லை, முகத்தில் ஒப்பனை இல்லை, உதட்டில் சாயம் பூசவில்லை, புருவங்களை பென்சிலால் வரையவுமில்லை, பொன் நகையுமில்லை பார்ப்போரின் மனம் கொள்ளை கொள்ளும் புன்னகைத் தவிர அதனால்தான் என்னவோ அந்த வஞ்சியவள் காட்சியளித்தால் அவன் கண்களுக்கு எழிலாக. ஒரு நொடியில் சிதைந்து போன அவன் அவளின் வருகைக்காகவே தினமும் காத்திருந்தான். அவன் அவளை கண்களால் காண காண அவள் மெல்ல மெல்ல அவனின் இதயத்திற்குள் நுழைந்தாள் காதலியாக.
பிரதோஷம் அன்று கோவிலுக்கு செல்வது அவளது வழக்கம். இன்று எப்படியாவது காதலை சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்க, நெஞ்சம் படபடக்க, வர மறுத்த வார்த்தைகளை வரவழைத்து “ஹலோ நான் சுதன்” என்றான் மெல்லிய குரலில். சத்தம் வந்த திசைநோக்கி திரும்பி நகைத்து, சிறு புன்னகையுடன் அலைபேசியில் “நான் ஹரிணி பேசுகிறேன்” என்று பேசிக்கொண்டே கடந்து சென்றாள். அன்பை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் அப்புன்னகையை சேகரித்துக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அவனுக்குள். அவளின் பெயரும் தெரிந்து கொண்டதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதுவரை ரசிகனாக இருந்த அவன் அன்றிரவே கவிஞனானான்.
கல்லூரி காலம் முடிவுற்று வேலைக்காக சென்னை சென்றான் காதலை சுமந்து கொண்டு. குறுகிய காலத்திலேயே, காதலின் வேகத்தால் உழைப்பால் உயர்ந்து வளரும் தொழிலதிபராக உருவெடுத்தான். வளரும் தொழிலதிபர் என்ற அவார்டுக்கு சொந்தக்காரனானான்.
சுதனின் தாயார் தேடிய நன்கு படித்து, வேலைக்கு செல்லும் மணமகளையும் மறுத்தான். அவனின் திறமையால் ஈர்க்கப்பட்டு விருப்பம் தெரிவித்த பெண்களையும் மணக்க மறுத்தான். நறும்புகை போட்டால் வீடு முழுவதும் நறுமணம் பரவி இருப்பது போல அவளின் நினைவுகள் அவன் மனம் முழுதும் நிரம்பியிருந்தது. அவளது நினைவுகள் வந்து வாட்டும் தருணத்தில் அவளை நினைத்து நினைத்து உருகி உருகி பாடல் பாடினான் ஸ்டார் மேக்கரில்.
அன்று உழைப்பாளர் தினம். நிறுவனம் முழுவதும் தாழம்பூ, மாவிலை மற்றும் தென்னங்கீற்றுகளாலான தோரணங்களும், பூமாலைகளும், வண்ணப் பூங்கொத்துகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிறுவனத்தில் பணி புரியும் எல்லா தொழிலாளர்களுக்கும் ஊக்கத் தொகையும் கிப்ட் பேக்கும் கொடுத்து தலைமை உரையாற்றி முடிக்கும் தருவாயில் அலைபேசி ஒலித்தது முருகன் என்ற பெயரில். மகிழ்ச்சியான குரலில் “ஹலோ முருகா சொல்லுடா” என்றான். “டேய் மச்சான் ஹரிணிக்கு திருமணமாகிடுச்சுடா எனக்கு இப்போதான் தெரிந்தது அதான் உனக்குத் தெரியப்படுத்த அழைத்தேன்” என்றான். அழைப்பை துண்டித்தவுடன் கண்கள் கண்ணீரால் நிரம்பி சிவந்தது. கை, கால் மற்றும் உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. உயிரும் உணர்வும் ஒரு கணம் இழந்தது போல் இருந்தது. சமாளித்து உதவி மேனேஜரை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விடை பெற்றான்.
காதலையும் அவளையும் நினைவுகளையும் சுமந்த அவனுக்கு காதலின் வலியும் சேர்ந்ததால் மனம் மிகவும் கனத்தது. கவனத்தை முழுவதும் நிர்வாகத்தில் திசை திருப்பியும் கவனச் சிதறலே ஆனது. நம்பி கொடுத்த நிர்வாகப் பொறுப்பை உதவி மேனேஜர் தன் வசப்படுத்தியதால் இழப்பு சந்திக்கும் வேளையில் அன்பான அம்மாவின் மரணச் செய்தி. இச்செய்தி அவனுக்கு இடி விழுந்தாற்போலானது. திடீரென்று இச்சம்பவம் நடந்ததால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை தாங்க இயலாமல் அவனின் இதயம் இயங்குவதா இல்லை இயக்கத்தை நிறுத்தி வலியை குறைப்பதா என்றே குழம்பிப் போனது அவனின் மன வேதனையை கண்டு. அன்பின் வடிவமான அம்மாவின் கடமைகளை முடித்து பாசமிகு தந்தையின் உதவியுடன் சென்னை சென்று நிறுவனத்தின் நஷ்டங்களை எல்லாம் சரி செய்து ஊருக்கே திரும்பி விட்டான்.
ஒருபுறம் தாயின் இழப்பு இழப்பை சரி செய்ய வேண்டியவளும் தூரத்தில். தன்னை தனிமைப்படுத்தி பகல் முழுவதும் கவி எழுதியும் இரவெல்லாம் பாடல்கள் பாடிக்கொண்டும் வலியின் வேதனையை குறைக்க முயன்றான்.
இப்படியே நாட்கள் நகர…சுதன் வீட்டிலிருந்தபடியே தொழில் தொடங்கி வயதான தந்தையையும் பார்த்துக் கொண்டான். சில வருடங்கள் இப்படியே உருண்டோடியது. ஒரு நாள் நண்பன் முருகன் வீட்டிற்கு வந்தான். சுதனின் தந்தை மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்… எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது இவன் ஒருவன் மட்டும் என்னையும் பார்த்துக் கொண்டு தொழிலையும் செய்தால் நேரத்திற்கு சரியான முறையில் சாப்பிடுவதில்லை இரவிலும் நன்றாக தூங்குவதுமில்லை ஆதலால் திருமணம் செய்து கொள் என்று சொன்னார் குரல் தழுதழுக்க கண்களில் நீர்த்ததும்ப. முருகனும் வற்புறுத்தவே, அப்பாவுக்காக அப்பாவின் உடல்நிலைக்காக “உங்கள் விருப்பம் அப்பா” என்று சுதன் கூறினான்.

40 வயதில் மணமேடை ஏறினான் வயதான தந்தைக்காக. மனைவியானவளும் நல்ல பெண். குடும்பத்தைப் புரிந்து வருமானத்திற்கு ஏற்ற குடும்பம் செய்து உறவினர்களையும், தந்தையையும் சிறப்பாக கவனிக்கும் பெண். ஆறு வருடங்கள் போனது குழந்தை வரவு இல்லை. சுதனின் தந்தை வயோதிக காரணத்தால் இறையடி சேர்ந்தார். தாய்க்குப் பின் தாயாக இருந்த தந்தையின் மரணம் மரணடியாக இருந்தது அவனுக்கு. கத்திக் கதறி அவனின் மனக்குமுறலை வெளிப்படுத்தினான்.
ஒருநாள், அவன் இரவின் மடியில் இருக்கும்போது அவனை நித்திரை வருடவில்லை. அறை முழுதும் அமைதி. குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சில்லென காற்று வர மனம் ஏதோ ஒரு அமைதி நிலையில் லயித்தது. ஆழ சென்ற மனதிற்கு பேரானந்தம் கிடைத்த உணர்வு அப்போது பக்கத்திலிருந்த அலைபேசியில் முகநூலை உருட்டிக் கொண்டிருக்கையில் ஒரு போட்டோ பாப்பப் ஆனது. அந்தப் படம் கண்ணைக் கவரும் விதத்தில் பல வண்ணங்களில் இருந்ததால் அவன் கண்களைக் கவர்ந்தன. கண்ணூற்ற அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிரம்பி அந்தப் படத்தை பார்க்க விடாமல் செய்தது. கண்களை இரு கைகளாலும் துடைத்துக் கொண்டு பார்க்கிறான் சிறு புன்னகையுடன் இருந்த அந்தப் பதுமையை. மணிக்கணக்காய் ரசிக்கிறான். இழந்த அனைத்தும் கிடைத்தாற்போல் மகிழ்ச்சி அடைகிறான்.
பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுக்கிறான் அவள் ஏற்றுக் கொள்வாளோ என்ற சந்தேகத்துடன். மெசஞ்சரில் ஒரு தகவலையும் அனுப்புகிறான் “எப்படிமா இருக்க? என்னை நினைவு இருக்கிறதா?” என்று. நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்கினான். காலை எழுந்ததும் விடியல் வந்து விட்டதா என்று முகநூலில் பார்க்க இன்னும் அவள் தகவலை பார்க்கவில்லை என்பதை அறிந்தான். போனை எடுப்பதும் பார்ப்பதும் வைப்பதுமாக அன்றைய நாள் கழிந்தது ஏமாற்றத்துடன். இரண்டு நாட்கள் கழித்து வேலை நேரத்தினிடையே ‘டிங்’ என்ற சத்தத்துடன் ஒரு தகவல் வந்து மறைந்தது நங்கையவள் என்று உணர்ந்ததும் ஏக்கத்துடன் போனை பார்த்து கொண்டே அவசர அவசரமாக வேலை முடித்து தகவலை பார்த்ததும் “நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா? ” என்று இருந்தது. அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அந்த அறிமுகம் இருவருக்கும் தெரிந்த நண்பர்கள் மற்றும் தோழிகள் என்பதால் சுவாரசியமாக இருந்தது அந்த முகநூல் உரையாடல். பிறகு அவளும் பிரண்ட் ரெக்யூஸ்ட்டை அக்செப்ட் செய்து கொண்டதால் சில நாட்கள் வரை சில மணித்துளிகள் உரையாடலாகவே இருந்தது.
ஒவ்வொரு முறையும் தன் காதலை பற்றி சொல்லி விடலாம் என்று எண்ணும்போது மனதில் ஓர் அச்சம் வந்துவிடும் குடும்பத்தில் இருக்கும் பெண்ணிடம் சொன்னால் இதனால் ஏதேனும் குழப்பம் வந்து விடுமோ? அல்லது தோழியாக பேசும் இவள் பேசாமல் போய்விடுவாளோ? என்று மனம் குழம்பினான். பல மனபோராட்டங்களுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தான். இதுவரை அவளை மட்டுமே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன் காதலை மட்டுமாவது அவளை நேரில் பார்த்து தெரியப்படுத்திவிட வேண்டுமென்று. அன்றிரவே, “உன்னை பார்த்து பல வருடங்கள் ஆகிறதே சந்திக்க முடியுமா?” என்று தகவல் அனுப்பினான். தோழியாக அவள் பதில் அனுப்பினாள் “அடுத்த மாதம் கோவில் திருவிழாவிற்கு வரவிருக்கிறேன் அப்போது சந்திக்கலாம் என்று. இதைப் பார்த்ததும் அவன் மகிழ்ச்சியில் பூரிப்படைந்தான். அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை நாட்களை மெல்ல மெல்ல கடத்தினான். அந்த நிமிடத்திலிருந்து சந்தோஷ கற்பனையில் மூழ்கினான்.
புதிய ஆடை அணிந்து, முடிக்கு சாயம் பூசி மல்லிகைப் பூவினை வாங்கிக் கொண்டு கோவிலில் சாமி கும்பிட்டு வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கையில் வந்தாள் அவன் தேவதை பட்டிழை தரித்த புடவையில் முகம் நிறைந்த புன்னகையுடன்…கண்கள் அவனை இங்கும் அங்கும் தேட சுதன் ஓடி வந்து அவள் கண் முன்னே நின்றான் மல்லிகைப் பூவினை அவளிடம் தந்து வைத்துக்கொள் என்றான். பூவினை வைத்ததும் ஒரு கணம் அவளை ரசித்தான். 26 வருடங்கள் ஆகின்றது நான் உன்னை பார்த்து தினமும் கல்லூரிக்கு நீ போகும்போது காத்திருந்து பார்த்து பார்த்து காதலித்தேன். இப்போதும் உன் நினைவில்… என்றதும் ஒரு நொடியில் உறைந்து போனாள் அதிர்ச்சியில்… உன்னை மணக்க முடியாமல் போன துயரமும் பிரிந்து வாழும் வேதனையும்…சொல்லும்போதே தொண்டை அடைத்தது… கண்கள் கலங்கியது அவள் மனமும். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடினாள் அவனைத் தேற்ற முடியாமல் விடைபெற்று சென்றாள் கற்சிலையாக.
தன்னால் ஒருவன் இவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பதை நினைத்து உடைந்தே போய்விட்டாள். அவன் வலியை உணர ஆரம்பித்தாள். ஒரே நினைவு ஒரே சிந்தனையுடன் வாழ்ந்ததால் இளமை இழந்து இன்பம் இழந்து வாழும் சுதனிடம் இதுவரை யாரிடமும் நட்பாக பழகாத அவள் நட்பாக பழக ஆரம்பித்தாள். சுதனின் மனைவி இந்த நட்புக்கு மரியாதை கொடுத்ததால் ஊருக்கு போகும் போதெல்லாம் அவனின் வீட்டிற்கு செல்வாள். இது தொடரும்…
கீதா அருண்ராஜ்

11 Comments

  1. கீதா, அருமையாக உள்ளது.கதையை தொடர்ந்து நன்றாக எடுத்துச்செல்ல வாழ்த்துக்கள்.

  2. அழகான ஒர் காதல் ஓவியம் நட்பாக தொடர்கின்ற போது
    காதலும் காதலிக்கும் அந்த நட்பை

  3. கதை அருமையாக உள்ளது தொடர்ந்து கதையை படிக்க ஆவல்

  4. முதல் காதல் முதல் முத்தம் இரண்டும் உயிருள்ளவரை மறக்காது என்பர் அதுபோல காலம் கடந்தும் காதல் தன்னை வெளிப்படுத்தியே தீரும் என்பது கதையின் போக்கு மிக அருமை இக்கதை மீண்டும் ஒருமுறை கல்லூரி வாழ்க்கையை பருவ காதலின் பக்குவத்தினை மெல்ல படம் பிடிக்கின்றது கடந்த கால நினைவுகளை மீண்டும் காட்சியாக்கி நிற்கின்றது கதையின் கரு அழகான காதல் கதை காதலுக்கு மரியாதை போல… நட்பாய் நகரும் உறவிற்கு வந்தனம் செய்வோம்

  5. அருமை 👌 தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்.நேர்த்தியான படைப்பு, வாழ்த்துகள் 🤝

  6. நன்கு அனுபவமிக்க கதாசிரியர் போல் உள்ளது உன்னுடைய படைப்பு. இந்த பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் கீதா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!