இலக்கியம்

எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘நீரதிகாரம்’ நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

166views
எழுத்தாளர் அ.வெண்ணிலா ‘ஆனந்த விகடன்’ வார இதழில் 122 வாரங்கள் தொடராக எழுதி, வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நாவல் ‘நீரதிகாரம்’. இரு பெரும் தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த நாவலைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நேற்று (2024 – ஜனவரி 18) வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைப் பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பெற்றுக்கொண்டார். உடன் தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, எழுத்தாளர் இமையம், கவிஞர் மு.முருகேஷ், விகடன் குழுமம் பொது மேலாளர் எம்.அப்பாஸ் அலி, எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் குடும்பத்தினர் ஆகியோர் உடனிந்தனர்.
தென்மாவட்ட மக்கள் தெய்வமென கருதும் கர்னல் ஜான் பென்னிகுக், மதுரையின் நீராதாரத்தை பெருக்கும் முயற்சியில் பெரியாறு அணையினைக் கட்டுவதற்கு எதிர்கொண்ட பிரச்சினைகள், பிரிட்டீஷ் ஆட்சிமுறை, அக்காலத்தைய உள்ளூர் சமஸ்தானங்களின் நிர்வாகம் என 19-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த வரலாற்றுப் பக்கங்களை ‘நீரதிகாரம்’ நாவல் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. 1488 பக்கங்கள், வழவழப்பான தாள், வண்ணப்படங்களுடன் வெளிவந்துள்ள இந்நாவல், மாமதுரையின் வரலாற்றை உணர்வுப்பூர்வமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
லண்டனில் இருக்கும் பிரிட்டீஷ் நூலகம், டெல்லி தேசிய ஆவணக்காப்பகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், கேரளாவிலுள்ள ஆவணக் காப்பகம், கேரள எல்லையிலுள்ள கண்ணகி கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குப் பலமுறை நேரடியாகவே களப்பயணமாகச் சென்று எழுத்தாளர் அ.வெண்ணிலா, முல்லை பெரியாறு அணை பற்றிய இந்நாவலை எழுதியுள்ளார். இதுதொடர்பான 35,000 பக்க ஆவணங்களை மின்னுருவாக்கம் செய்து, அதன் பிரதியை முன்பே தமிழக முதல்வரிடம் எழுத்தாளர் அ.வெண்ணிலா ஒப்படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!