கவிதை

“கைக்கூலிகளுக்கு மத்தியில் இவன் ஒரு மேய்வேலி’ : திப்பு சுல்தான்

146views
தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில்
சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்…
துப்பு கெட்டவர்கள் மத்தியில்
தேசத்தை உயிருக்கு மேலாக
ஒப்பிட்டவன் இவன்…
திப்பு – மனிதர்களில் ஒரு புனிதன்..
மன்னர்களில் ஒரு மாமணி….
வீரத்தால் சிறந்தவன் – நெஞ்சின்
ஈரத்தால் நிறைந்தவன்…
அடுத்தவர்க்கு உதவும் – உப
காரத்தால் இனித்தவன் –
எதிரிகளை மேல் கொண்ட
காரத்தால் தனித்தவன்….
தேசத்தை நேசிப்போர்க்கு
திப்புவின் வீரம் பிடிக்கும்…
பிடிக்காதவர்க்குத்தான்
உள்ளமெல்லாம் அரிக்கும்….
அடுப்படிப் பூனைகளுக்கு மத்தியில்
புலியாக உலவியவன்
களைகளுக்கு மத்தியில்
விடுதலைப் பயிராக முளைத்தவன்…
உதிர்ந்த மயிர்களுக்கு மத்தியில்
உயிராகத் திகழ்ந்தவன்….
அட்டைக் கத்திகளுக்கு மத்தியில்
வீர வாளாக ஒளிர்ந்தவன்….
கொள்ளையரை மட்டுமல்ல – ஆங்கிலேய
வெள்ளையரையும் துச்சமாக நினைத்தான்…
அவர்களுக்குப் பெரும்
அச்சமாக இருந்தான் –
விடுதலைப் போராட்டத்தின்
உச்சமாக இருந்தான்….
இறந்த பிறகும் வீரத்தின்
மிச்சமாக இருந்தான்…
கைக்கூலிகளுக்கு மத்தியில்
இவன் ஒரு மேய்வேலி …
பொய்ப்பூச்சுகளுக்கு மத்தியில்
ஒரு மெய்ப்பூச்சு….
தேசத்தின் உயிர்மூச்சு….
கபட தாரிகளுக்கு மத்தியில்
ஒரு மெய் ஞானி….
துரோகிகளுக்கு மத்தியில்
ஒரு போர் முரசு….
காட்டிக் கொடுப்பவருக்கு மத்தியில்
ஒரு கலங்கரை விளக்கு…
வேடதாரிகளுக்கு மத்தியில்
விவேகத்தின் வெளிச்சம்…
ஆங்கிலேயருக்கு எதிராக
இவன் தொட்ட பக்கங்களில் எல்லாம்
படிந்தது ரத்தக்கறை….
அதுவும் பரிசுத்தக்கரை…
ஆனாலும் –
இந்த சிங்கத்தின்
வரலாறெங்கும் பட்டதில்லை
ஒரு அசிங்கக்கரை….
இவன் தேசத்தின் கோவில்கள் எங்கும்
பச்சைப் பிறைக் கொடிகள் பறக்கும் …
அவன் தந்த பரிசின் ஒளியில்தான்
அங்கே விளக்குகள் எரியும்….
அதை எவரும் குறைசொன்னால்
அந்த விளக்குகளே வினாக்களாக மாறி
அந்த நீசரை எரிக்கும்….
மற்றவர்களின் வணக்க வழிபாட்டுப் பூசைகளுக்கு
எண்ணெய் தந்தான்… பூசாரிகள் மனம் குளிர
தட்டுக்கள் நிறைய
பொன்னைத் தந்தான்…
துச்சாதனர்களால் துகில் உரியப்பட்ட
சேரிப் பூக்களுக்கு
ஆடைகள் வழங்கிய
மாயக்கண்ணன் இவன்…
ஆமாம்…
மேலாடைகள் கழற்றப்பட்ட
தாழ்த்தப்பட்டவருக்கும்
ஆடைகள் வழங்கினான்…
தழலாடிய மேனிகளுக்குப்
புனலாடைகள் போர்த்தினான்..
இவன் கை புல்லாங்குழல் பாடியது
சாம வேதமல்ல…
சமதர்ம வேதம்..
இந்த புலியின் முன்வர
நாய்களும் நரிகளும் நடுங்கின…
கண்ணில் படாமல் ஒதுங்கின …
வஞ்சகச் சதியால் மடிந்தான் – ஆனாலும்
தேசத்தின் விடுதலையாகவே முடிந்தான்…
அதனால்
இவன் உயிருக்கு இறப்பில்லை…
இவனை மறுப்போருக்கு ஒருபோதும் சிறப்பில்லை….
இதை இந்தியாவின் உண்மையான வரலாறு சொல்லும் – மறைப்போரை
இந்திய வரலாறே கொல்லும் ….
(இன்று மாவீரன் தேசத்தியாகி திப்புவின் பிறந்த நாள்…)
அத்தாவுல்லா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!