தமிழகம்

மதுரை கேகேநகர் பகுதியில் ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேருக்கு ‘கெட் அவுட்’ ; விசாரணையில் தவறு உறுதியானதால் கமிஷனர் உத்தரவு

90views
மதுரை ஆவினில் 2020, 2021ல் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு, அவர்களை அப்பணியில் இருந்து நீக்க கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சியில் இவ்விரண்டு ஆண்டுகளிலும் மேலாளர், உதவி பொது மேலாளர், எஸ்.எப்.ஏ., உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்பட்டன. அப்போதைய பொது மேலாளர் ஜனனி சவுந்தர்யா தலைமையிலான தேர்வுக் குழு எழுத்து தேர்வு, நேர்காணல் நடத்தி நியமனம் செய்தது. இதில் விண்ணப்பிக்காமல் நேரடி தேர்வு, அருப்புக்கோட்டை பகுதி ஒரு கிராமத்தில் 17 பேர் தேர்வானது, வங்கி டி.டி., மாற்றி விண்ணப்பித்தது, தகுதியுள்ளவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட முறைகேடுகள் அடுத்தடுத்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

இதன்பேரில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு, பால்வளம் துணைப் பதிவாளர் தலைமையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்தது. இதில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டன. இதுதொடர்பான அறிக்கை கமிஷனர் சுப்பையனுக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அந்தாண்டுகளில் நியமிக்கப்பட்ட மேலாளர் (தீவனம்), மேலாளர் (எம்.ஐ.எஸ்.,) மேலாளர் (பொறியியல்), முதுநிலை பணியாளர்கள், ஜூனியர் அசிஸ்டென்ட், துணை மேலாளர்கள் என 47 பேரின் நியமனங்களை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 81ன் கீழ் ரத்து செய்து உத்தரவிட்டார். அப்போதைய ஆவின் மேலாளர் (நிர்வாகம்) காயத்ரி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!