103
பரப்பளவின் அடிப்படையில் உலக நாடுகளை வரிசைப் படுத்தினால் அதில் கத்தார் 165 ஆவது இடத்தில் போய் நிற்க வேண்டியிருக்கும். உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகளில் மிகச் சிறியதும் கத்தார் தான்.
இந்த பல்லி மிட்டாய் சைஸ் நாடு தான் உலகின் லெக் தாதாவான அமெரிக்காவை ஏதேதோ உள்ளடி வேலையெல்லாம் பார்த்து, ஆப்பீட் ஆக்கி 2022 ஆம் ஆண்டின் உலகக் கால்பந்து கோப்பையை நடத்தும் வாய்ப்பைத் தட்டிப் பறித்தது. அறிவிக்கப் பட்ட முதல் நாளில் இருந்து இன்றுவரை ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தாலும் அத்தனையையும் லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணி விட்டுக் கூலாக போட்டிகளைத் துவக்கி நடத்திக் கொண்டிருக்கின்றது கத்தார். அதைச் சாத்தியப் படுத்தியது அதனிடம் மலை மலையாகக் கொட்டிக் கிடக்கும் பணம்.
எல்லாம் பெட்ரோலிய மற்றும் எரிவாயுக் காசு. அதிர்ஷ்டக் காத்து அவர்கள் பக்கம் ஓங்கி அடிப்பதால்தான் அவர்களால் இந்தப் போடு போட முடிகிறது என உலகின் மற்ற நாடுகள் பெருமூச்சு விடுகின்றன. ஆனால் அந்த அதிர்ஷ்டக் காற்று ஒன்றும் சும்மா தன்னைப் போல அவர்கள் பக்கம் வீசவில்லை. சொல்லப் போனால் அதை அதிர்ஷ்டம் என்று சொல்வதே அபத்தம்.
கத்தாரின் இந்த இமாலய வளர்ச்சிக்குப் பின் பெரும் உழைப்பும், தொலைநோக்குப் பார்வையும், தலைமைப் பண்பும், சாதுர்யமும் அடங்கி இருக்கின்றன. அது ஒரு மிரள வைக்கும் வெற்றிக் கதை.
வெனிசுலா, லிபியா, நைஜீரியா, ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் பெட்ரோலிய லாட்டரிக் குலுக்கலில் வெற்றி பெற்றும் அதைப் பயன்படுத்தி வளமான வாழ்வையும் எதிர்காலத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தவறிய சில முக்கியமான உதாரணங்கள். இவற்றிற்கு நடுவே கத்தார் எழுதியது சேற்றில் முளைத்த செந்தாமரை போன்றதொரு தனித்துவமான வெற்றிக் கதை. அரசியல், பொருளாதாரம், தொழில் நுட்பம், முதலீடு என்னும் பல தளங்களில் மூன்று தலைமுறைத் தலைவர்கள் அடுத்தடுத்து எடுத்த முடிவுகளின் வெளிப்பாடுதான் கத்தாரின் இன்றைய வெற்றியும் செழுமையும்.
கத்தாரில் 1940 ஆம் ஆண்டிற்குப் பிறகே எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை அது முத்துக் குளித்தலையும், மீன் பிடித்தலையும் மட்டுமே வாழ்வாதாரத்திற்காக நம்பி இருந்ததொரு ஏழை நாடு. 1940 திலேயே எண்ணெய் வளம் கண்டறியப் பட்டாலும் இரண்டாம் உலகப் போரால் உற்பத்தியைத் துவக்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக 1949 ல் மெல்ல ஆரம்பித்த உற்பத்தி 1951 ல் மெல்ல ஒழுங்கிற்கு வந்து கத்தாருக்கு ஒரு நிலையான வருமானத்தை அளிக்கத் துவங்கியது.
அடுத்த இருபது ஆண்டுகளுக்குப் பிரிட்டனின் அல்லக்கைகளாக இருந்து நாட்டை ஆண்டு வந்த “அல்தானி” அரச குடும்பத்தினரின் கோட்டைகளில் கரன்சி மழை கொட்டித் தீர்த்தது. 1971 ஆம் ஆண்டு கத்தாருக்கு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது.
அரசர் தனது உறவுக் காரர்களை அரசின் பெரும் பொறுப்புக்களில் அமர்த்தி ஏராளமான சம்பளத்தையும், சலுகைகளையும் வாரி இறைத்து தனது அதிகாரத்தைப் பெருக்கி ஸ்திரப் படுத்திக் கொண்டார்.
கத்தாரின் முதல் பள்ளிக் கூடம், மருத்துவமனை, மின் உற்பத்தி நிலையம், கடல் நீரைக் குடிநீராக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் 50களுக்குப் பிறகே கட்டமைக்கப் பட்டன. அறுபதுகளில் நாடு மெல்ல மெல்ல செழுமை பெறத் துவங்கியது.
1972 ஆம் ஆண்டு எமிர் அகமது பின் அலி அல்தானி இரானுக்குத் தன்னுடைய கழுகுகளோடு ஜாலியாக ஒரு வேட்டைச் சுற்றுலாவுக்குச் சென்றார். தனது தந்தையை விடப் பெரிய கனவுகளைக் கொண்டிருந்த இளவரசர் கலீஃபா பின் ஹமத் அல் தானி இது தான் சமயம் என ஒரு சிறு புரட்சி செய்து இனி நானே நாட்டுக்கு அரசன் என்று முடி சூட்டிக் கொண்டார்.
பெட்ரோலும், இயற்கை எரிவாயுவும் வாய்க்கப்பெற்றதல்ல கத்தாருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். அது செய்த புண்ணியம் அதற்குக் கிடைத்த தலைவர்கள். தலைவன் கொடுங்கோலனாகவும், குஜால் பேர் வழியாகவும் இருந்திருந்தால் நாடும், நாட்டு மக்களும் நாசமாய்ப் போயிருந்திருக்க வேண்டியது தான். ஆனால் தந்தையை புறம் தள்ளி ஆட்சியைக் கைப்பற்றிய இளம் கலீஃபாவுக்கு நாட்டை முன்னேற்றுவதற்கான பெரும் கனவுகள் இருந்தன.
முதல் வேலையாக அரச குடும்பத்தின் ஊதாரித்தனமான தண்டச் செலவுகளுக்கும், அரச குடும்பத்தினருக்கு வழங்கப் பட்டு வந்த வரைமுறையில்லாத சலுகைகளுக்கும் தடா போட்டு விட்டு நாட்டின் வருமானத்தை கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு செலவிட ஆரம்பித்தார். நாட்டின் உட்கட்டமைப்பை மெல்ல மெல்ல பலப் படுத்திக் கொண்டு வந்தார். கத்தார் உருமாறத் துவங்கியது.
1971 ஆம் ஆண்டு கத்தாரின் வரலாற்றில் மற்றுமொரு மிக முக்கியமான மைல்கல். அந்த வருடம் தான் உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான “நார்த் டோம் ” கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் பெட்ரோ டாலர்கள் கொட்டிக் கொண்டிருந்ததால் அரசு இயற்கை எரிவாயுப் புதையலில் கை வைக்கவேயில்லை. அது மட்டுமின்றி இயற்கை எரிவாயுவை கச்சா எண்ணையைப் போல கப்பலில் ஏற்றி மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்க முடியாது. பைப்லைன் போட்டு எத்தனை நாடுகளுக்கு சப்ளை செய்து விட முடியும்? அதுவும் தொலைதூர நாடுகளுக்கு பைப்லைன் வழியே எரிவாயு சப்ளை என்பது எப்படிக் கணக்குப் போட்டாலும் லாபகரமான தொழிலாக இருக்கப் போவதில்லை. பாதுகாப்பு, பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து குழாய்கள் அமைப்பதில் உள்ள உலக அரசியல் சிக்கல்கள் எனப் பல காரணங்கள்.
ஆனால் 1980 களில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியும், அரசரின் சமூக நலத் திட்டங்களும் நாட்டின் பொருளாதாரத்தைத் தள்ளாட வைத்தன. இதனால் 1989ல் நார்த் டோமில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணியை கத்தார் அரசு மெல்லத் துவக்கியது. ஆனால் வேலையும் சூடு பிடிக்கவில்லை, பொருளாதாரமும் ஒன்றும் முன்னேறுவதாய்க் காணோம்.
எமிர் கலீஃபா பின் ஹமத்தின் ஆரம்ப காலத் துடிப்புகள் அடங்கி விட்டன போலும். 1980 லிருந்து 1995 வரையிலான 15 ஆண்டுகளில் நாடு மத மதவென நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது அடுத்து வரிசையில் நின்ற பட்டத்து இளவரசரின் பொறுமையை மிகவும் சோதித்து விட்டது போலும். தனது தந்தை எமிர் கலீஃபா பின் ஹமது அல்தானி சுவிட்சர்லாந்தில் உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த பொழுது இனிமேல் நானே கத்தாரின் அரசன் என்று இளவரசர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி தனக்குத் தானே முடி சூட்டிக் கொண்டு தந்தை போட்டுக் கொடுத்த வழியிலேயே தானும் அரியணை ஏறினார்.
சும்மா பெருமைக்கு அரசராகவில்லை மனிதர். தாத்தாவை ஓரங்கட்டி ஆட்சிக்கு வந்த தந்தை பாய்ந்ததென்னவோ எட்டடி மட்டுமே. ஆனால் இந்தப் பேரக் குட்டிப்புலி தனது தந்தையை ஓரங்கட்டிவிட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது 128 அடி.
ஆம் நாய் பெற்ற தென்னம் பழம் என்ற கதையாக உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு சக்தியைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காசாக்க முடியாமல் தலையைச் சொறிந்து கொண்டிருந்த கத்தாருக்கு நல் வழியைக் காட்டினார் புதிய அரசர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி.
இயற்கை எரிவாயுவை படா படா ஃப்ரிஜ்களில் வைத்து – 162°C க்கு டெம்பெரேச்சரைக் குறைத்தால் அதன் அடர்த்தி 600 மடங்கு குறைந்து வாயு திரவ நிலைக்கு மாறும். லிக்விஃபைட் நேச்சுரல் கேஸ் (LNG) என்றழைக்கப்படும் இந்த அழுத்தப்பட்ட திரவ நிலை இயற்கை எரிவாயுவைக் கஷ்ட்டப்பட்டுப் பெரிய பெரிய கப்பல் கண்டெய்னர்களில் அடைத்து சீல் செய்து, பெட்ரோலைப் போலவே உலகம் முழுவதும் அனுப்பலாம் எனத் திட்டம் தீட்டினார்.
ஆனால் 1995ல் இந்தத் தொழில் நுட்பம் உருவாக்கப் பட்டிருக்க வில்லை. அதற்கான தேவையும் அந்த தொழில் நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சிக்கு முதலீடு செய்யும் தொலை நோக்குப் பார்வையும் ஷேக் ஹமத் பின் கலீஃபாவுக்கு இருந்தது. அன்று அவர் எடுக்க வேண்டியிருந்தது மிகப் பெரிய மற்றும் நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைக்கக் கூடிய மிக முக்கியமான முடிவு.
அன்று அவர் தன் நாட்டின் நலன் கருதி, துணிச்சலான மிகப் பெரிய முதலீட்டு முடிவுகளை எடுத்தார். அன்று அவர் பல பத்து பில்லியன் டாலர்களை ஆராய்ச்சிக்குச் செலவிட்டதன் பலனாக இன்று வரை கத்தார் ஒவ்வொரு ஆண்டும் டாலர்களை நூற்றுக்கணக்கான பில்லியன்களில் அறுவடை செய்துகொண்டிருக்கிறது.
கத்தாரின் லிக்விஃபைட் இயற்கை எரிவாயுத் தொழிற்சாலைகள் ஒவ்வொன்றும் ப்ரமாண்டமான கட்டுமானம். அவற்றின் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன் உலகில் வேறெங்கும் இல்லாதது. அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய இயற்கை எரிவாயு தொழிற்சாலைகளுக்கு ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் எரிவாயுவைத் தயாரிக்க எட்டு முதல் பன்னிரெண்டு அமெரிக்க டாலர்கள் செலவு பிடித்தால் அதைக் கத்தார் வெறும் இரண்டு முதல் நான்கு டாலர்களில் உற்பத்தி செய்கிறது. போட்டியாளர்களை விட குறைந்த பட்சம் 4 டாலர்கள் குறைந்த செலவில் தனது சரக்கை உற்பத்தி செய்யும் கத்தாரின் லாபத்தையும், உலக இயற்கை எரிவாயுச் சந்தையில் அது செலுத்தக் கூடிய ஆதிக்கத்தையும் நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
இது தான் ஒரு திறமை மிக்க நல்ல தலைவனும் அரசும் பதினைந்தே ஆண்டுகளில் செய்து முடித்த சாதனை.
இதில் தொழிற்சாலைகள் மட்டுமல்லாது உற்பத்தி செய்யப்பட்ட சரக்கை எடுத்துச் செல்லும் கப்பற் படையை மிகப் பிரம்மாண்டமானதாகக் கட்டியதும், நாட்டின் அரசியல், அயல் உறவுக் கொள்கை, பாதுகாப்பு, உணவு, நீர், மருந்து மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை உறுதி செய்தல் என பல தளங்களில் தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய முக்கியமான முடிவுகளை எடுத்து ஒவ்வொரு அடியாக, நிதானமாக எடுத்து வைத்தனர். ஆனால் சும்மா சொல்லக் கூடாது ஒவ்வொன்றும் முரட்டு அடி.
தென் கொரியாவில் கட்டப்பட்ட கத்தாரின் “அல் ரெக்காயத்” என்ற ஆயிரம் அடிக்கும் சற்றே அதிக நீளமுடைய மிகப் பெரிய ஒரு கப்பல் மட்டுமே ஒரே சமயத்தில் 250 லிருந்து 330 கோடி ரூபாய் மதிப்புள்ள இயற்கை எரிவாயுவை மூன்று முதல் ஐந்து நாட்களில் இந்தியாவிற்கு டெலிவரி கொடுக்க முடியும் என்ற அவர்களுடைய உற்பத்தி மற்றும் சப்ளை திறனை எண்ணிப் பார்க்கும் போது எனது தலை சொடுக்கிவிட்ட பம்பரக் கட்டையைப் போலக் கரகரவெனச் சுற்றுகிறது.
கத்தார் கேஸ் கம்பெனியிடம் சின்னதும் பெரியதுமாக இரண்டு சைஸ்களில் மொத்தம் 56 கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் 45 கப்பல்கள் தென் கொரியாவின் ஹியுண்டாய், சாம்சங் மற்றும் டேவூ வின் கப்பல் கட்டும் தளங்களில் புத்தம் புதிதாகக் கட்டப்பட்டவை. அடுத்த 50 வருடங்களுக்கு ஜம்மென்று சரக்குகளை ஏற்றி இறக்கும் வல்லமை படைத்த பெரும் கப்பற் படை கத்தாரின் முதுகெலும்பு.
இன்னமும் கப்பலின் கண்டெய்னர்களுக்கு – 160 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் எரிவாயுவை பம்ப் செய்யும் உபகரணங்கள், கடற் கொள்ளையர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள கப்பலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கடல் வழிப் போக்குவரத்து மேலாண்மை, எரிவாயு கசிந்து விடாமல் இருக்கத் தேவையான உயர் தொழில் நுட்பப் பாதுகாப்பு ஏற்பாடுகள், எரிவாயு இறக்கப் படும் இடத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டுமானம் என இந்த வியாபாரத்திற்குத் தேவையான ஒட்டு மொத்த கட்டமைப்பையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கின்றனர்.
இதையெல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடிந்ததால் தான் 1996 க்குப் பிறகு சீனா, இந்தியா, ஜப்பான், ஸ்பெய்ன் என்று தனது சந்தையை மளமளவென கத்தாரால் விரிவு படுத்திக் கொள்ள முடிந்தது.
வருமானத்தில் கிடைத்த லாபத்தை உலகெங்கும் உள்ள பெரும் நிறுவனங்களிலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்யும் ஒரு ட்ரஸ்ட்டையும் உருவாக்கித் தொடர்ந்து முதலீடுகளை மேற் கொண்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவையே எக்காலத்திற்கும் நம்பிக் கொண்டிருக்க முடியாது என்னும் முன்னெச்சரிக்கையே காரணம்.
இப்படிப்பட்ட வலுவான பொருளாதாரக் கட்டமைப்பை பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கைகளையும் கத்தார் செய்து கொண்டுள்ளது. அமெரிக்காவின் படைகளை நிறுத்த பக்காவாக ஒரு படைத் தளத்தை உருவாக்கி எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
இவை மட்டுமின்றி உலகின் தலை சிறந்த பல்கலைக் கழங்கள் அடங்கிய கல்வி மாவட்டம், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்க்கும், துபய் விமான நிலையத்திற்கும் சவால் விடும் வகையிலான மிகப்பெரிய கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மற்றும் தோஹா பன்னாட்டு முனையம், அருங்காட்சியகங்கள், பொழுது போக்குப் பூங்காக்கள், மிக நீண்ட அழகிய வானளாவிய அடுக்கு மாடிக் கட்டிடங்களைக் கொண்ட அதிநவீன ஸ்கைலைன் என மத்தியக் கிழக்கின் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரின் கலவையாக தோஹாவை உருமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சவுதி, பஹ்ரைன், துபய் போன்ற பங்காளிகள் வம்புச் சண்டை போட்டுத் தங்கள் மீது விதித்த பொருளாதாரத் தடையை கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சமாளித்து அரபுலகில் தான் ஒரு அசைக்க முடியாத பெரும் சக்தி என்பதை நிரூபித்தது.
இன்று ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஜாம் ஜாமென உலகக் கோப்பைக் கால்பந்துத் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த உலகக் கோப்பைக்கு ரஷ்யா செலவு செய்ததை விட 15 மடங்கு அதிகம் செலவு செய்துள்ளதாக வரும் செய்திகளைக் கொண்டு நோக்கும் போது கத்தாரின் இந்த ஆடம்பரம் எந்த லாஜிக்கிற்குள்ளும் அடங்க மறுக்கிறது.
ஆனால் LNG விஷயத்தில் அந்தக் குட்டி நாடு போட்ட கணக்கை உலகம் கணிக்கத் தவறியதைப் போல இந்த உலகக் கோப்பையை நடத்த அவர்கள் எடுத்த முடிவிற்குப் பின்னும் ஏதாவது ஒரு பெரிய கணக்கு ஒளிந்திருக்கக் கூடும் என்றே நான் நினைக்கிறேன்.
1995 ல் தனது தந்தைக்குக் கல்தாக் கொடுத்து விட்டு அரியணை ஏறிய ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மிகவும் நல்லதனமாக 2013 ஆம் ஆண்டு தனது 61 ஆம் வயதில், “மக்களே இளைய தலைமுறைக்கு வழிவிடும் விதமாக நான் ஒய்வு பெற்றுக் கொள்கிறேன்” என்று அறிவித்து விட்டு தனது மகனான பட்டத்து இளவரசன் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானிக்கு முடி சூட்டி தன் வழி தனி வழி என்று ரிட்டையர்மெண்டைக் கொண்டாடச் சென்று விட்டார்.
புதிய அரசருக்கு முன் இருக்கும் சவால்கள் செல்வத்திற்காகவன்றி, அதீத செல்வத்தால் என்பது தான் வாழ்வின் நகை முரண்.
அளவுக்கு மிஞ்சினால்!!!
உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான கத்தாரின் இன்றைய மக்கள் தொகை சுமார் 27 லட்சம். “என்னது அவ்வளவுதானா?” என ஆச்சரியப் படாதீர்கள். இந்த 27 லட்சத்தில் மண்ணின் மைந்தர்களின் எண்ணிக்கை 12% க்கும் குறைவு. 2019 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி மொத்தக் கத்தாரிகளின் எண்ணிக்கை வெறும் மூன்று லட்சத்து முப்பதாயிரம் பேர் மட்டுமே. ஒவ்வொரு புத்தாண்டுக்கும் திருப்பதிக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையே 75,000 பேர். அதனால் தான் 7 லட்சம் இந்தியர்கள் கத்தாரின் மெஜாரிட்டி இனமாக நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றனர். கத்தாரிகளுக்கே லிஸ்ட்டில் நான்காவது இடம் தான். என்ன மண்ணின் மைந்தர்களைத் தவிர வேறு யாருக்கும் அங்கு நிரந்தரக் குடியுரிமை கிடைக்காது.
கத்தாரிகளைத் தவிர வேற்று நாட்டவர்கள் சொத்துக்களை வாங்க முடியாது. ஒரு சில சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மட்டும் வீடுகளோ சொத்துக்களோ வாங்கலாம். ஆனால் அதுவும் 99 வருட லீஸுக்கு என்பது போன்ற கட்டுபாடுகள் உண்டு. அதே போல ஒரு கத்தாரி கூட்டாளியாவது இல்லாமல் அங்கே வெளியாட்கள் யாரும் தொழில் துவங்கவும் முடியாது. அரசு வேலையில் இருந்து கொண்டு சும்மா பேருக்கு கூட்டாளி என்று கையெழுத்துப் போட்டு விட்டு முதலீடே இல்லாமல் வெளிநாட்டுத் தொழில் முனைவர்கள் முதல் போட்டு ஆரம்பித்த நிறுவனங்களின் லாபத்தில் ரைட் ராயலாக தனது பங்கு லாபத்தை அனுபவிக்கும் அரபி அர்பாப்களே சமூகத்தின் புத்திசாலிப் பணக்காரர்கள்.
அதனால் 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் சுகமாக வாழ்வதற்குத் தேவையான மானுட உழைப்பைத் தந்திட 24 லட்சம் பணியாளர்கள் உலகின் பல நாடுகளில் இருந்து கத்தாரில் குடியேறி உள்ளனர். ஒன்று, இத்தனை பேருக்குச் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு கத்தாருக்கு வசதி இருக்கிறது. வெளிநாட்டுத் தொழில் முனைவர்கள் கத்தாரிகளுக்குச் சம்பாதித்துக் கொடுத்தது போக பெரும் லாபம் ஈட்டும் அளவிற்குத் தொழில் துறை பணம் காய்க்கும் சுரங்கமாக இருக்கிறது என்பது மற்றொரு முக்கியமான சமாச்சாரம்.
ஆனால் 1950ம் ஆண்டிக்கு முன்பு அது பரம ஏழையாக இருந்த நாடு. அதன் அப்போதைய மக்கள் தொகை வெறும் 25,000 பேர் மட்டுமே. எண்ணெய் வர்த்தகம் ஆரம்பித்த பிறகு கத்தாருக்கு வருமானம் சரசரவென அதிகரித்தது. 1950 களில் அம்மக்களின் சராசரி ஆண்டு வருமானம் $2756. ஆனால் இன்று அது கிட்டத்தட்ட $62,000. 70 ஆண்டுகளில் 30 மடங்கு வளர்ச்சி. நமது நாட்டில் இந்தியர்களின் சராசரி தனி நபர் ஆண்டு வருமானம் இன்றும் சுமார் $1500 (1,30,000 ரூபாய்கள்) மட்டுமே என்றால் கத்தார் நம்மை விட எவ்வளவு வசதியான நாடு என்பதைக் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்குள் கத்தாரிகளின் தனி நபர் வருமானம் 1,00,000 அமெரிக்க டாலர்களைத் தொட்டு விடும் எனக் கணித்திருக்கின்றனர்.
கத்தாரிகளுக்கு கல்வி, மருத்துவம், தண்ணீர் மற்றும் மின்சாரம் முற்றிலும் இலவசம். அனைவருக்கும் வீடு கட்ட நிலமும் கொடுக்கப்பட்டு மிகக் குறைந்த வட்டியில் 30 ஆண்டு காலக் கடன் உதவியும் வழங்கப் படுகிறது. அனைவருக்கும் வேலை உத்திரவாதம். சொல்லப் போனால் படித்து முடிக்கும் ஒவ்வொரு கத்தாரி இளைஞருக்கு முன் இருக்கும் ஒரே பிரச்சினை தனக்கு முன்பு உள்ள இருபது வேலைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தான்.
இவ்வளவு பணம் இருந்தால் மக்கள் மகிழ்ச்சியாகவும், பெருந்தன்மையுடனும் தானே வாழ வேண்டும். ஆனால் 40% கத்தாரிய திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன என்னும் புள்ளிவிவரம் அதற்கு நேரெதிரான ஒரு திருப்தியற்ற, வெறுப்பில் வாழும் சமூகத்தை அடையாளம் காட்டுகிறது.
மனத்திருப்தி இல்லை என்பது ஒரு புறம் என்றால் மூன்றில் இரண்டு பங்கு கத்தாரிகள் அதிக உடல் எடையால் அவதியுறுவது மற்றொரு மிக முக்கியமான சிக்கல். இது பெரியவர்களோடு குழந்தைகளையும் உள்ளடக்கிய புள்ளி விவரம்.
கத்தாரிகளின் அனைத்துக் குடும்பங்களிலும் குழந்தைகளை வளர்த்தெடுப்பது சர்வ நிச்சயமாக பிலிப்பைன்ஸ், நேபாளம் அல்லது இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து வரும் ஆயாம்மாக்கள் மட்டுமே.
ஒவ்வொரு கத்தாரிக்கும் 7 வெளிநாட்டினர்கள் என்று சுகவாழ்வு வாழும் போதும் இளந்தலைமுறைக் கத்தாரிகள் தங்களை விட அதிக சம்பளத்தில் பணியாற்றும் வெளிநாட்டினரைப் பார்த்துப் பொருமுவது அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இது தான் வளைகுடா நாட்டு மக்களின் பொதுவான மனவோட்டம் என்பதையும் நாம் மனதில் கொள்ள் வேண்டியது அவசியம்.
வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்தும் இலவசம் ப்ளஸ் ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் என்ற நிலையிருந்தால் அதுவும் படித்து முடித்த அனைவருக்கும் வேலை என்னும் நிலையிருந்தால் அத்தகைய மனிதர்களுக்கு வாழ்க்கையில் எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் போது மகிழ்ச்சி நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிடும். அது ஒரு விதமான சொல்ல முடியாத அவஸ்தை. வெய்யில் இருந்தால் தானே நிழலுக்கு மரியாதை? நீங்கள் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை நகரும் இடமெல்லாம் குளிர் நிழலும், தென்றல் காற்றும், நறுமண மலர்களும் நிறைந்து தேனாறும் பாலாறும் ஓடினால், நீங்கள் எப்பொழுதும், எதற்காகவும், எந்த உழைப்பையும் தரத் தேவையற்ற ஒரு சூழ் நிலை அமைந்தால் அதை வர மென்பீர்களா? இல்லை சாபம் எனக் கருதுவீர்களா?
கத்தாரிகள் இன்று அப்படிப்பட்டதொரு சமூகச் சிக்கலில் தான் வாழ்ந்து வருகின்றனர். முந்தைய அரசர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி அடுத்த 50 ஆண்டுகளுக்கான கத்தாருக்குத் தேவையான வலுவான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கி விட்டார். அவர் சேர்த்து வைத்திருக்கும் பணமே இனி குட்டி மேல் குட்டி போட்டு எதிர்காலக் கத்தாரிகள் ஏழேலு தலைமுறைக்கு சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவதற்குப் போதுமானதாக இருக்கும்.
இந்த நிலையில் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியின் முன் இருக்கும் மிகப் பெரிய சவால் தன் தந்தையின் புகழை விஞ்சி நிற்பதற்கு என்ன வழி என்பதைக் கண்டறிவதே. அவருக்கான வாய்ப்பாக நான் கருதுவது தன் நாட்டு மக்களுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்துவதே அவர் செய்யக் கூடிய பெரிய சாதனையாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
உலகின் அதிக தனி நபர் வருமானம் கொண்ட நாடுகளின் வரிசையில் 62 ஆயிரம் அமெரிக்க டாலர்களோடு ஐந்தாம் இடத்தில் இருக்கும் கத்தார் 90 ஆயிரம் டாலர்களோடு மூன்றாமிடத்தில் இருக்கும் நார்வேயிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏராளமான பாடங்கள் உள்ளன.
நார்வே மட்டுமின்றி ஸ்காண்டி நேவியன் அல்லது நார்டிக் நாடுகள் என அழைக்கப் படும் ஸ்வீடன், நார்வே, டென்மார்க், பின்லாந்து மற்றும் ஜஸ்லாந்து போன்ற ஐந்து நாடுகளுமே பணக்கார நாடுகள் தான்.
Lovely….
பல போராட்டங்களை சந்தித்து சாதித்த தேசம்.