நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று, கோப்பை தட்டிச் சென்றது.
நியூசிலாந்து சென்ற நெதர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் நியூசிலாந்து வென்று தொடரை (2-0) கைப்பற்றியது. மூன்றாவது போட்டி ஹாமில்டனில் நடந்தது.
‘டாஸ்’ வென்று நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு கப்டில், நிகோல்ஸ் (2) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. பின் இணைந்த கப்டில், வில் யங் இருவரும் சதம் விளாசினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 203 ரன் சேர்த்த போது கப்டில் (106) அவுட்டானார்.
தனது கடைசி போட்டியில் களமிறங்கிய ராஸ் டெய்லர் 14 ரன் எடுத்தார். பிரேஸ்வெல் (22), கேப்டன் லதாம் (23) சற்று உதவினர். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 333/8 ரன் குவித்தது.
கடின இலக்கைத் துரத்திய நெதர்லாந்து அணிக்கு ஸ்டீபன், மாக்ஸ் ஓ தவுத் (16) ஜோடி துவக்கம் தந்தது. விக்ரம்ஜித் 25, பாஸ் டி லீடு 21, ரிப்பன் 24 ரன் எடுத்தனர். ஸ்டீபன் அதிகபட்சம் 64 ரன் எடுத்தார்.
வான் லீக் (32) போராடிய போதும், வெற்றிக்கு போதவில்லை. நெதர்லாந்து அணி 42.3 ஓவரில் 218 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 115 ரன்னில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 3-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 38. கடந்த 2006ல் களமிறங்கிய இவர் 112 டெஸ்ட் (7683 ரன்), 236 ஒருநாள் (8593), 102 ‘டி-20’ (909) போட்டிகளில் பங்கேற்றார். நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் அரங்கில் அதிக ரன், அதிக சதம் (21), அதிக அரைசதம் (51) அடித்துள்ளார்.
தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், நேற்று 450 வது சர்வதேச போட்டியில் பங்கேற்றார். சொந்தமண்ணில் கடைசி போட்டியில் களமிறங்கிய ராஸ் டெய்லர், தேசிய கீதம் பாடிய போது, அவரது குழந்தைகள் மெக்கென்சி, ஜான்டியும் பங்கேற்றனர்.
பேட்டிங் செய்ய வந்த போது அவரது இருபுறமும் நெதர்லாந்து வீரர்கள் அணிவகுத்து நின்று கவுரவம் அளித்தனர். இவர், 16 பந்தில் 14 ரன் எடுத்து திரும்பினார். கடைசியில் கண்ணீர்மல்க விடைபெற்றார்.