நினைத்ததைவிட ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது: ஹைதராபாத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கருத்து
ஐபிஎல் டி 20 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளம் நினைத்ததைவிட வித்தியாசமாக இருந்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
ஐபில் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைவீழ்த்தியது. 211 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள்மட்டுமே எடுக்க முடிந்தது. 9 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்த ஹைதராபாத் அணியால் மீள முடியாமல் போனது.
27 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வானார். வெற்றி குறித்து அவர் கூறும்போது, ‘நாங்கள் நினைத்ததைவிட ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. டெஸ்ட் மேட்சில் வீசுவது போன்றுசிறந்த நீளத்தில் பந்து வீசியதால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது. நீண்டகால இலக்குகள் வைத்துக்கொள்ள போவதில்லை. முடிந்தவரை வெற்றி பெற வேண்டும், அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும்.
உடற்தகுதி, விளையாட்டு பற்றி விழிப்புணர்வு, ஆட்டத்தின் சூழல்நிலையை புரிந்து கொள் வது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன். அவசரப்படாமல் விளையாட முயற்சிக்கிறேன். களத்தில் அதிக நேரம் செலவிட்டால் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் வேகத்தைக் கூட்ட முடியும் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு சீசனுக்கு முன்பும் பெரிய கனவுகளுடன்தான் வருகிறோம். ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த போகிறோம்’ என்றார்.
இன்றைய ஆட்டம்
சென்னை – லக்னோ
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்