ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு களமிறங்கிய இளம் வீரரான ஆயுஷ் பதோனி, தனது அதிரடியால் அறிமுக ஆட்டத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோல்வியடைந்தது. 159 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி இறுதிக்கட்ட ஓவர்களில் ராகுல் டிவாட்டியா 24 பந்துகளில் 40 ரன்களும், அபினவ் மனோகர் 7 பந்துகளில் 15 ரன்களும் விளாசியதன் மூலம் 2 பந்துகளை மீதம் வைத்து வெற்றியை வசப்படுத்தியது.
இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் பேட்டிங்கின் போது 22 வயதான ஆயுஷ் பதோனி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.லக்னோ அணி 4.3 ஓவர்களில் 29 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் அறிமுக வீரராக களமிறங்கிய டெல்லியைச் சேர்ந்த ஆயுஷ் பதோனி எந்தவிதபதற்றமும் இல்லாமல் விளையாடி 41பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை கவுரமான நிலைக்கு கொண்டு சென்றார்.
லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் காம்பீரின் ஊக்கத்தால் தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறனை நிரூபித்துக்காட்டியுள்ளார் பதோனி. அவர் கூறும்போது, “முதல் பவுண்டரி அடித்த பிறகு நான் இங்கு விளையாடுவதற்குத் தகுதியான நபர் என உணர்ந்தேன். அதன்பிறகு நினைத்தபடி விளையாடினேன். அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார். ஆட்டத்தின் சூழலை எண்ணி விளையாட வேண்டாம். அதற்கு மூத்த வீரர்கள் உள்ளார்கள். நீ நினைத்தபடி இயல்பாக விளையாடு என்றார்.
கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் ஏலத்தில் யாரும் என்னைத் தேர்வு செய்யவில்லை. சில அணிகள் என்னைக் கூப்பிட்டு என் பேட்டிங்கைக் கவனித்தார்கள். ஆனால் ஏலத்தில் யாரும் என்னைத் தேர்வு செய்யவில்லை. என்னை ஏலத்தில் தேர்வு செய்ததற்காக லக்னோ அணிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.
கடந்த மூன்று வருடங்களாகப் போராட்டம் தான். டெல்லி அணியிலும் என்னைத் தேர்வுசெய்யவில்லை. ஒரு பருவத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதனால்நான் எனது ஆட்டத்தை மேம்படுத்தினேன். சில பிரத்யேக ஷாட்களை சேர்த்துள்ளேன், இது எனக்குமிகவும் உதவியாக உள்ளது” என்றார்.
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறும்போது, “பதோனி எங்களுக்கு பேபி டிவில்லியர்ஸ். முதல் நாளில் அவர் பேட் செய்த விதம் நம்ப முடியாத வகையில் இருந்தது. அவரால் 360 டிகிரியில் பந்தை அடிக்க முடியும்” என்றார்.