192
27.3.2022 அன்று ரமணி ராஜ்ஜியம் நிகழ்ச்சியில் “வடுக்கள்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. ஆகச்சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் சாந்தி சந்திரசேகர் அவர்கள்.
தலைப்பு : வடுக்கள்
எண்சீர் மண்டிலம்
வடுக்களென்று சொல்வதெல்லாம் வலிகள் என்றே
வழக்காக்கிப் பழக்கிவிட்டோம் வாழ்வில் நாமே
படுகின்ற புண்களினால் வாழ்வில் வீரர்
பாராட்டப் படுவரன்றோ பாங்காய் நாளும்
விடுகின்ற வடுவளையம் விளைத்த ஓலை
விளக்குமன்றோ பனைமரத்தின் முதிர்ச்சி தன்னை
படுகின்ற அனுபவங்கள் பதியும் நெஞ்சில்
பண்பட்ட வாழ்வளிக்கும் பாடம் தானே!
தாய்வயிற்று வடுவாலே தாய்மைப் பேறு
தனிப்பெருமை தானீயும் தகவின் ஈடு
காய்த்தமரம் பெறுகின்ற கல்லின் காயம்
காண்பவர்கள் நாடுகின்ற கனியின் சீரே
வாய்த்தமழை பெறுகின்ற வயலின் கீறல்
வடுவெல்லாம் மறைக்கின்ற வாய்ப்பே காணும்
ஆய்ந்தறிந்து ஆன்றோர்கள் அந்நாள் தொட்டு
அன்பூற்றி வளர்த்ததமிழ் ஆயுள் காக்க
தாய்த்தமிழை அயற்சொல்லால் தறித்துத் தீராத்
தழும்பேற்றும் மடமைதனை தவிர்க்க வேண்டும்
காய்த்துவிடும் காயங்கள் காலம் தன்னால்
கனிந்துவிடும் தழும்புகளைக் கனவாய் மாற்றி
மாய்த்துவிடும் அன்பொன்றே மருந்தாய்க் கொண்டு
மண்மீதில் மாந்தர்நம் மாண்பை நாட்டி
வாய்த்ததொரு வாழ்வுதனில் வழங்கும் நேசம்
வளர்த்தெடுத்து வளங்கூறும் வடுக்கள் வார்ப்போம்!.
-
சாந்தி சந்திரசேகர் மதுரை
add a comment