வரும் 2022 – 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் துறைகளுக்கான மானிய ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பிப்., 1ம் தேதி பா.ஜ.,வைச்சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 – 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடந்து வந்தது. மத்திய பட்ஜெட் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது.
துறைகளுக்கான மானிய ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தனி மசோதா தாக்கல் செய்யப்படும். வரி வசூல் உள்ளிட்டவை அடங்கிய, நிதி மசோதா தனியாக தாக்கல் செய்யப்படும். இவை இரண்டும் பண மசோதாக்கள் என்பதால், லோக்சபாவில் நிறைவேறினால் போதும். ராஜ்யசபாவில் இவற்றின் மீது விவாதம் மட்டும் நடக்கும்.
ராஜ்யசபாவின் ஒப்புதல் இதற்கு தேவையில்லை. அதன்படி, துறைகளுக்கான மானிய ஒதுக்கீடுகளுக்கான மசோதாவை, நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதில் எதிர்க்கட்சிகள் சில திருத்தங்களை முன்வைத்தன. அவை நிராகரிக்கப்பட்டு, இறுதியில் குரல் ஓட்டெடுப்பில் இந்த மசோதா நிறைவேறியது. இதன் வாயிலாக மத்திய பட்ஜெட் நடவடிக்கைகளில், மூன்றில் இரண்டு பங்கு முடிந்துள்ளது.