விளையாட்டு

3வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் வெற்றி- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது

66views

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வங்காளதேச அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில்  வங்காளதேச அணியும்,  2வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்  செய்தது .

தொடக்கம் முதலே வங்காளதேச அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர்.

37 ஓவர்கள் முடிவில் 154 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஜனிமேன் மாலன் 39 ரன்கள் எடுத்தார். வங்காளதேச பந்து வீச்சாளர்  தஸ்கின் அகமது 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் .

பின்னர் 155 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்காளதேச அணி 26.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.

கேப்டன் தமீம் இக்பால் 87 ரன்கள் குவித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து  9 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது .

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேச அணி கைப்பற்றியதுடன்,  தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!