ஹரியானா சட்டப்பேரவையில் மதமாற்றத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த மசோதாவின் படி, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். 2022 மதமாற்ற தடுப்பு மசோதாவுக்கு ஹரியானா அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26, 27 மற்றும் 28-வது பிரிவின் கீழ் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் இந்த மசோதா குறித்து கூறியிருந்தார்.
எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமையும் சுதந்திரமும் மக்களுக்கு உண்டு. இதையும் மீறி, கட்டாய மதமாற்ற வழக்குகள் அரங்கேறி வருகின்றன, இதைக் கருத்தில் கொண்டு, ஹரியானா அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
உத்தரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் அண்மையில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை இயற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.