சினிமா

உருகவும்..மருகவும் வைத்த இசைக்குயில்.. மெல்லிசை பறவை ஷ்ரேயா கோஷல்

101views

தமிழ் திரை இசை வானில் தெற்கின் குரல்கள் தென்றலாய் தாலாட்டியபோது வடக்கிலிருந்து வீசிய ஓர் வாடை காற்று ஷ்ரேயா கோஷல்.

தமிழ்..தெலுங்கு..மலையாளம் என எந்த மொழியானாலும் அச்சரம் பிசகாமல் பாடும் ஷ்ரேயா கோஷலின் குரலுக்கு மயங்கியவர்கள் பல ஆயிரம் பேர். வசந்தபாலன் இயக்கிய ‘ஆல்பம்’ திரைப்படத்தில் “செல்லமாய் செல்லம் என்பாயடா” என்று பாடி அறிமுகமானார். இசை ரசிகர்களின் இந்த செல்லக்கிளி. ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்த முதல் திரைப்படமான ‘வெயில்’.லில் “உருகுதே.. மருகுதே.. ஒரே பார்வையாலே.. எனப் பாடியபோது தமிழும் சொக்கிதான் போனது.

ஷ்ரேயா கோஷலை நினைத்தாலே 7ஜி ரெயின்போ காலனியில் இடம்பெற்ற ‘ நினைத்து நினைத்து பார்த்தேன்’ பாடல். நினைவில் வருவது தவிர்க்க முடியாததானது. ‘அமர்ந்து பேசும் மரங்களில் நிழலும், நமது கதையை காலமும் சொல்லும்.. வரிகளில் அவரின் குரல் இனம்புரியாத சோகத்தின் உணர்ச்சியை மீட்டியது.

ஷ்ரேயா கோஷல் பாடிய தமிழ் பாடல்களில் அனேக இசை ரசிகர்களுக்கு ப்ரியமான பாடல் என்றால் அது கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உன்னவிட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னும் இல்ல’ பாடலாகத்தான் இருக்கும். திருமணம் செய்த இளஞ்ஜோடி நிலா வெளிச்சத்தில் ஊரைவிட்டு காதல் கீதத்தோடு பயணம் செய்யும் அந்த காட்சியில் கோஷலின் மெல்லிய குரல் இரவின் தடங்களில் காதல் பூக்களை தூவி சென்றிருக்கும்.

இளையராஜாவின் இசையில் இளங்காத்து வீசிய ஷ்ரேயாவின் குரல், அன்பை முன்னே வர சொன்னது ஏ.ஆர் ரஹ்மான் இசையில். ‘சில்லுன்னு ஒரு காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முன்பே வா அன்பே வா’ பாடலில் கோஷலின் குரல், காதலில் நனையவிட்டிருக்கும் இசையின் காதல் அன்பர்களை.

விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ மன்னிப்பாயா’ என ஏங்கி ஓங்கி ஒலிக்கும் ஷ்ரேயாவின் குரல் காதல் நெஞ்சங்களின் நேச கீதமானது. காதல் கீதம் பாடிய ஷ்ரேயா கோஷலின் குரல் ‘நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம். அழகாய் உடைந்தேன்’ என பாடத்தொடங்கும் போதே நெஞ்சம் உடைந்து போனார்கள் இசை ரசிகர்கள்.

இமானின் இசையில் மென்மையாய் இழையும் மெட்டுக்களில் பல பாடல்களை பாடிய ஷ்ரேயா கோஷலின் குரல் பல ஜில்லாக்கள் தாண்டி ‘கண்டாங்கி… கண்டாங்கி.. கட்டி வந்த பொண்ணு’ என இளம் காளையர்களை முணுமுணுக்க வைத்தது மட்டுமல்லாமல் ‘மைலாஞ்சி.. மைலாஞ்சி’ என ஷ்ரேயாவை நம்ம வீட்டுப்பிள்ளையாக்கியது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!