இந்தியா

சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பால் காங்கிரஸ்…பீதி!கோவா, மணிப்பூருக்கு பறந்த மூத்த தலைவர்கள்

65views

தொங்கு சட்டசபை அமையலாம் என கணிக்கப்படும் மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களுக்கு, மூத்த தலைவர்களை அனுப்பியுள்ளது காங்கிரஸ்.

கடந்த தேர்தலில் ஏற்பட்ட அனுபவத்தால், அக்கட்சி ‘உஷார்’நடவடிக்கையில் இறங்கியுள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள், நாளை வெளியாகின்றன.இதனால், டில்லி அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த, ரஷ்யா- – உக்ரைன் போர் பரபரப்பு, தேர்தல் முடிவுகளின் பக்கம் திரும்பி உள்ளது.தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், உ.பி.,யில் பா.ஜ.,வும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் ஆட்சிஅமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. குழப்பம்அதே சமயம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களின் கருத்துக் கணிப்புகள் குழப்பமாக உள்ளன.இது, முக்கிய அரசியல் கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், கோவா மற்றும் மணிப்பூர் இரண்டிலுமே, காங்., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும், பா.ஜ.,வின் அதிரடி காரணமாக, வெற்றி பெற்ற காங்., எம்.எல்.ஏ.,க்கள் பலர், ‘அலேக்’காக துாக்கப்பட்டனர்.மின்னல் வேகத்தில் காட்சிகளை மாற்றியமைத்த பா.ஜ., இரு மாநிலங்களிலும் அதிரடியாக ஆட்சியை அமைக்கவே, காங்., கட்சி நிலை குலைந்து போனது.இந்த முறையும் அதுபோல எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக, காங்., மேலிடம் திட்டமிட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மணிப்பூரில் ஆட்சி அமைக்கும் வரை, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்க, சத்தீஸ்கர் மாநில அமைச்சர் சிங் தியோ, காங்., பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட மூன்று மூத்த தலைவர்களை, காங்., மேலிடம் அம்மாநிலத்திற்கு அனுப்பி வைத்து உள்ளது.

கோவாவிற்கு, கர்நாடகா மாநில காங்., தலைவர் டிகே.சிவக்குமார் அனுப்பப்பட்டுள்ளார். மாநிலத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், புதிய ஆட்சியை அமைத்துவிட்டு பெங்களூரு திரும்ப, சிவக்குமாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்பார்வைமேலிடப் பார்வையாளர்கள் போக, ஏற்கனவே கோவா பொறுப்பாளராக உள்ள சிதம்பரமும், மணிப்பூர் பொறுப்பாளராக உள்ள ஜெய்ராம் ரமேஷும்,அந்தந்த மாநிலங்களில் தங்கியிருப்பர்.

அதே போல, உத்தரகண்ட் பொறுப்பாளராக உள்ள காங்., பொதுச் செயலர் மோகன் பிரகாஷ், உத்தர பிரதேச பொறுப்பாளராக உள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், பஞ்சாப் பொறுப்பாளராக உள்ள காங்., பொதுச் செயலர் அஜய் மாக்கன் ஆகியோரும், அவரவர் மாநிலங்களில், தேர்தல் முடிவுக்குப் பிறகான அனைத்து விவகாரங்களையும் மேற்பார்வையிடுவர். சொகுசு விடுதிகளில் காங்., – எம்.எல்.ஏ.,க்கள்?ஐந்து மாநிலத் தேர்தலில், மிகவும் சிறியதான கோவாவில் ஆட்சி அமைக்க, பா.ஜ., மற்றும் காங்., இடையே, கடும் போட்டி நிலவுகிறது.

மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் அவை ஈடுபட்டுள்ளன.கடந்த 2017ல், கோவா சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 40 இடங்களில், காங்., 17ல் வென்றது. அதே நேரத்தில், 13 தொகுதிகளில் வென்ற பா.ஜ., சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது.தற்போது நடந்துள்ள சட்டசபை தேர்தலிலும், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.இதையடுத்து, மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில், இவ்விரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., சில தொகுதிகளில் வெற்றி பெறும் என, கணிப்புகள் கூறுகின்றன.பா.ஜ., கூட்டணியில் இருந்த எம்.ஜி.பி., எனப்படும் மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, தற்போது திரிணமுல் காங்.,குடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி, எம்.ஜி.பி., கட்சிக்கு, பா.ஜ., மற்றும் காங்., துாது அனுப்பிஉள்ளன.தேர்தலின்போதும், கொள்கை அடிப்படையிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் திரிணமுல் காங்., மற்றும் ஆம் ஆத்மியின் தயவை, காங்., கேட்டுள்ளது.

தங்களுடைய கட்சியினர் யாரும் விலை போய்விடக் கூடாது என்பதற்காக, வேட்பாளர்கள் அனைவரையும், ‘ரிசார்ட்’ எனப்படும் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்ல, காங்., திட்டமிட்டுள்ளது.நாளை ஓட்டு எண்ணிக்கைஉத்தர பிரதேசத்தில், கடந்த மாதம் 10ல் துவங்கி, இம்மாதம் 7ம் தேதி வரை ஏழு கட்டமாகவும், மணிப்பூரில் கடந்த மாதம் 28, இம்மாதம் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடந்தது.உத்தரகண்ட், கோவாவில் கடந்த மாதம் 14லும், பஞ்சாபில் கடந்த மாதம்20லும், ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இந்நிலையில், ஐந்து மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை, நாளை நடக்கிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும், வரும் ஜூலையில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலிலும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!