மோசடி புகார் நிரூபிக்கப்பட்டதால் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்து சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, கடந்த 2013-2016 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். இவர் அங்கு பணியாற்றியபோது தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதி மீறலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இவருக்கு உடந்தையாக நிர்வாக இயக்குநரின் தலைமை ஆலோசகராக செயல்பட்ட ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் இயக்குநர் ரவி நரேன் ஆகியோரும் உடந்தையாக இருந்தது. இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா உட்பட 3 பேரும் விதி மீறலில் ஈடுபட்டது உறுதியானது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் பார்த்துக்கொள்ள லுக் அவுட் சுற்றறிக்கையை விடுத்தது. மேலும் மூவரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, சித்ரா ராமகிருஷ்ணா முன் ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, சித்ரா ராமகிருஷ்ணாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர்.