177
27.2.2022 அன்று “ரமணி ராஜ்ஜியம்” நிகழ்ச்சியில் “விருப்பத்தலைப்பில்” கவிதைகள் வரவேற்கப்பட்டு நடைபெற்ற கவியரங்கத்தில் ஆகச்சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதை
இனிதுழைப்போம் என்தோழா எழுந்தே வாநீ!
பசியென்ற சொல்லுக்கிங் கிடமே இல்லை
பாங்காகத் தொழில்ஒன்றைத் தேர்ந் தெடுத்தால்
நசித்துநமைத் தாக்குகின்ற வறுமை யில்லை;
நனியார்வம் எனும்இலக்கில் நடைப யின்றால்!
பொசுக்குகின்ற ஏழ்மைத்தீ புகைந்தே போகும்
புறப்படுவாய் என்தோழா பொதுமை நோக்கில்!
கசிகின்ற கண்ணீரில் மிதப்போர் தம்மை
கனிந்தஅன்பால் அரவணைப்போம் உழைப்பால் ஒன்றி!
நெஞ்சுரத்தைத் தேக்குகின்ற எண்ணம், என்றும்
நிலையாகப் பண்பாடும் தழைக்கும் வண்ணம்
அஞ்சாமை ஈகைஅறம் அமைதி நண்ணும்
அரும்சால்பே மனிதநேய மாண்பை வெல்லும்
துஞ்சாமை துனிவுடைமை தன்னம் பிக்கை
தூயமனம் உயர்கொள்கை கொண்டு ழைத்தால்
எஞ்ஞான்றும் இடர்நம்மை தொடர்வ தில்லை;
இனிதுழைப்போம் என்தோழா எழுந்தே வாநீ…!
ஓயாமல் நாடோறும் குறிக்கோள் கொண்டு
உழைத்தாலே உயர்வுதனைக் காணக் கூடும்!
சாயாத நேர்மையெனும் உத்தி கொண்டே
சலியாமல் உழைத்தவர்கள் வரலா றெய்தி
தேயாத புகழோடு வாழு கின்றார்
ஜி.டி.நாயிடு போன்றவர்கள் எடுத்துக் காட்டாய்!
தூயமனம் தொண்டுள்ளம் கொண்டே வாழ்வில்
தொடர்ந்துழைத்தால் உயர்வதற்குத் தடையு முண்டோ?
-
கவிஞர் க.செல்வராசன்