இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி டி20 தொடரின் முதல் போட்டி லக்னோ மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் பவுலர்கள், ஆல்ரவுண்டர் என பந்துவீச்சுக்கு பெரிய பட்டாளமே இருந்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ரோஹித் – இஷான் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அதிரடியில் அசத்தினர். இந்திய அணி 111 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ரோஹித் சர்மா 44 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
ஸ்ரோயஸ் ஐயர் 3-வது வீரராக களமிறங்கி இஷானின் அதிரடிக்கு அவரும் ஈடுகொடுத்தார். இஷான் கிஷான் 56 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் 28 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக இந்திய அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 199 ரன்களை குவித்தது.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சு பட்டாளத்திடம் சிக்கி திணறியது. புவனேஸ்வர் குமார், பும்ரா, ஹர்சல் படேல், சஹல், வெங்கடேஸ் ஐயர், ரவிந்திர ஜடேஜா மற்றும் தீபக் ஹூடா என 7 பந்துவீச்சாளர்களை ரோஹித் சர்மா இறக்கினார். இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.