பாஜகவின் இந்த மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: லாலு பிரசாத் யாதவின் 5 ஆண்டு சிறை தண்டனை குறித்து தேஜஸ்வி யாதவ் பேட்டி
பீகாரில் கால்நடை தீவனம் ஊழல் தொடர்பான 5வது வழக்கில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் கடந்த 1990 முதல் 1997ம் ஆண்டு வரை இரண்டு முறை முதலமைச்சராக இருந்த போது கால்நடை தீவனம் வாங்கியதில் 950 கோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்தது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான 4 வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட லாலுவிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் 7 ஆண்டுகள் தண்டனை நிறைவடைந்தது.
உடல் நலக்குறைவால் அவர் ஜாமினில் இருந்த நிலையில் 5வது வழக்கில் லாலு உள்பட 75 பேரை குற்றவாளிகளாக ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது. தண்டனை விவரத்தை தற்போது அறிவித்த நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த வாரம் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட லாலு, தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். இதனிடையே இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேஜஸ்வி யாதவ்; பாஜக உடன் லாலு இணக்கமாகச் சென்றிருந்தால் இந்நேரம் லாலு ராஜா ஹரிச்சந்திரா என அழைக்கப்பட்டிருப்பார்.
ஆனால் பாஜக- ஆர்எஸ்எஸ் உடன் லாலு சண்டையிடுவதால் சிறை தண்டனையை எதிர்கொள்கிறார். மாட்டுத்தீவன ஊழலைத் தவிர வேறு எந்த ஊழலும் நாட்டில் நடக்கவில்லையா? ஒரு தலைவர் மட்டும்தான் ஊழல் செய்துள்ளாரா? பீகாரில் கிட்டத்தட்ட 80 ஊழல்கள் நடந்துள்ளன. அதன்மீது சிபிஐ என்ன நடவடிக்கை எடுத்தது? லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட து குறித்து மேல்முறையீடு செய்வோம் என கூறியுள்ள லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பாஜகவின் இந்த மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என கூறியுள்ளார்.