இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம்(டி.டி.எப்.ஐ.,) ஆறு மாதம் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டது.
இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா 26. கடந்த 2018 காமன்வெல்த்தில் தங்கம் வென்றவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தேசிய பயிற்சியாளர் சவுமியாதீப் ராயை, மைதானத்தில் அனுமதிக்க மறுத்தார். இது தொடர்பான சர்ச்சையில் ஆசிய கோப்பை அணியில் மணிகா பத்ரா சேர்க்கப்படவில்லை.
இதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் மணிகா பத்ரா. அதில்,’ வீரர், வீராங்கனைகள் தேர்வு வெளிப்படையாக இல்லை. சவுமியாதீப் ராய் ஆதாயம் தரும் வகையில் இரட்டை பதவி வகிக்கிறார். தனது அகாடமி வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதற்காக நான் தோற்க வேண்டும் என கேட்டார்,’ என தெரிவித்து இருந்தார்.
புகாரை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி விக்ரம்ஜீத் சென் தலைமையில் மூவர் குழு அறிக்கை சமர்பித்தது. இதில்,’தேசிய பயிற்சியாளர் ‘பிக்சிங்’ செய்ய முயன்றார் என்ற மணிகா புகார் உண்மை தான். டி.டி.எப்.ஐ., நிர்வாகிகள், விளையாட்டு நட்சத்திரங்கள் நலனை விட, தங்களது நலனுக்காகத் தான் பாடுபடுகின்றனர்,’ என தெரிவித்து இருந்தது.
நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி ரேகா பல்லி அளித்த உத்தரவில், ‘டி.டி.எப்.ஐ., ஆறுமாதம் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுகிறது. இதன் மீதான நம்பிக்கைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. டி.டி.எப்.ஐ., நிர்வகிக்க இந்திய விளையாட்டு ஆணையம் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்,’ என தெரிவித்து இருந்தார்.
மணிகா பத்ரா கூறுகையில்,”தேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். ஆனால் என்னை மோசமாக நடத்தியதால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்பட்டது. வேறு வழியில்லாத நிலையில் கோர்ட்டை அணுகினேன். இந்திய நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. இந்த பிரச்னையில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.