அருணாச்சலப் பிரதேசம் காமெங் செக்டார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நமது ராணுவ வீரர்கள் கடுமையான பனிப் பொழிவிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் கடந்த 6-ம் தேதி கடும் பனிச் சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் 7 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.
அவர்களைத் தேடும் பணி நடைபெற்றது. மீட்பு குழுவினர் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 7 வீரர்கள் இறந்தனர். அவர்களது உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்த்தன் பாண்டே இத்தகவலை தெரிவித்தார். வீரர்களின் உடல்கள் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள ராணுவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், முறைப்படியான நடவடிக்கைகளுக்குப் பின் வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.