பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், பிப்ரவரி 1 முதல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியாண்டு மாணவர்களை தவிற மற்ற மாணவர்கள் ஆன்லைன் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுதலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் மாணவர்கள் குழப்பம் ஏதுமில்லாமல் மகிழ்ச்சியுடன் தேர்வுக்கு தயாராகி வந்தனர். இந்நிலையில் நேற்று தமிழக அரசு அளித்த கூடுதல் தளர்வுகளில் பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்தது. 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கல்லூரிகள், தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வுகள் நடத்தப்படும் என்றும், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனவும் விளக்கமளித்துள்ளார்.