ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள வரலாற்று புகழ் வாய்ந்த மணிக்கூண்டில், 30 ஆண்டுகளுக்கு பின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர் லால் சவுக்கில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த மணிக்கூண்டு உள்ளது.
பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இந்தப் பகுதி எப்போதுமே பதற்றமானதாகவே இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின், 1992ல் பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இந்த மணிக்கூண்டில் தேசியக் கொடி ஏற்றினார். அதன்பின் இங்கு கொடி ஏற்றப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாளில் தேசியக்கொடி ஏற்ற பொதுமக்கள் அனுமதி கேட்டும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை காரணம் காட்டி, ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் மறுத்து வந்தது. கடந்த 2019ல் ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீநகர் லால் சவுக் மணிக்கூண்டில், 30 ஆண்டுகளுக்கு பின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. லால் சவுக்கில் வசிக்கும் சஜித் யூசுப் ஷா மற்றும் சாஹில் பஷீர் ஆகிய சமூக ஆர்வலர்கள், ‘கிரேன்’ வாயிலாக மணிக்கூண்டின் உச்சியில் தேசியக் கொடி ஏற்றினர்.