ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மெட்விடேவ், சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். சிமோனா ஹாலெப், சபலென்கா அதிர்ச்சி தோல்வி கண்டனர்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், அமெரிக்க ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-2, 7-6 (7-4), 6-7 (4-7), 7-5 என்ற செட் கணக்கில் 70-ம் நிலை வீரரான அமெரிக்காவின் மேக்சிம் கிரெஸ்சியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி 30 நிமிடம் நீடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் அஜெர் அலியாசிம் சரிவில் இருந்து சாதுர்யமாக மீண்டு வந்து 2-6, 7-6 (9-7), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான மரின் சிலிச்சுக்கு (குரோஷியா) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் கால் பதித்தார். இந்த போட்டி 3 மணி 35 நிமிடம் அரங்கேறியது. கால்இறுதியில் அலியாசிம், மெட்விடேவ்வை எதிர்கொள்கிறார்.
இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர் 7-6 (7-3), 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதியை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 6-4, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போராடி அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை சாய்த்து 3-வது முறையாக கால்இறுதிக்கு தகுதி கண்டார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 4-6, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் 61-ம் நிலை வீராங்கனையான அலிஸ் கோர்னெட்டிடம் (பிரான்ஸ்) வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார். இந்த ஆட்டம் 2 மணி 33 நிமிடம் நடந்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அலிஸ் கோர்னெட் தனது 63-வது முயற்சியில் முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்து இருக்கிறார். இதேபோல் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 7-5, 2-6, 6-7 (7-10) என்ற செட் கணக்கில் எஸ்தோனியாவின் கயா கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 9-வது இடத்தில் இருப்பவருமான போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் முதல் செட்டை இழந்தாலும், சுதாரித்து கொண்டு சரிவை சமாளித்து 5-7, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 38-ம் நிலை வீராங்கனையான சோரனா சிர்ஸ்டியை (ருமேனியா) விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ஸ்வியாடெக், கயா கனேபியை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டேனியலி காலின்ஸ் 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) சாய்த்து 2-வது முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.