இந்தியா

உ.பியில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா..! அதிர்ச்சியில் பாஜக!!

58views

நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

403 தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால், உத்தர பிரதேச தேர்தல் நாடு முழுவதும் உற்று நோக்கப்படுவது வழக்கம். தேர்தல் தேதி அறிவிப்பால் உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடும் முயற்சியில் இறங்கி உள்ளது.

அதே நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி முனைப்பாக உள்ளது. அவற்றுடன் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளன. தற்போதைய சூழலில் அங்கு 4 கட்ட போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து மூத்த அமைச்சரான (தொழிலாளர் நலத்துறை) சுவாமி பிரசாத் மவுரியா (வயது 68) நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்தார். பதவியை விட்டு விலகிய சிறிது நேரத்தில் அவர் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சி தாவல் தொடங்கி இருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைச்சர் தாரா சிங் சவுகானும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரும் சமாஜ்வாதி கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!