தெலுங்கு – தமிழில் தனுஷ் நடிக்கும் புதிய படமான ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்த தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதோடு படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் நடிகர் தனுஷ் கல்லூரி மாணவன் கெட்டப்பில் இருக்கிறார்.
இதில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கல்லூரி மாணவன் கெட்டப்பில் இருக்கும் போஸ்டர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இதையடுத்து வாத்தி படத்தில், கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவன் என இரு வேடங்களில் தனுஷ் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.