ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-ம் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ல் திரும்பப் பெற்றது.
இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வீடு மற்றும் நிலம் வாங்க வழி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய வீடு மற்றும் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில் காஷ்மீர் ரியல் எஸ்டேட் மாநாடு 2021 நடைபெறுகிறது. இதில் 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் 19 ஒப்பந்தங்கள் வீடு கட்டுமானம் சார்ந்ததாகும். இதுபோன்ற மற்றொரு மாநாட்டை அடுத்த ஆண்டு மே மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரி வித்தார்.
இந்த மாநாடு நடைபெறும் பகுதியிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்துக்கு ஏற்கெனவே அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.