ஒரே சமயத்தில் குவியும் வெளிநாட்டுப் பயணிகளால் ரயில் நிலையம் போல் மாறிய டெல்லி சர்வதேச விமான நிலையம்: பயணிகள் அவதியால் மத்திய அமைச்சர் சிந்தியா தலையீடு
கரோனா தொற்று காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து விமானப் போக்குவரத்து தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.
இதில், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகள் வழியாகவும் விமானங்கள் வரத் தொடங்கியுள்ளன.
இச்சூழலில், கரோனாவின் புதிய வைரஸான ஒமைக்ரான் பரவும் ஆபத்து உருவாகி உள்ளதால், வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டது. இதன் முடிவில் தொற்று இல்லை என்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட பயணிகள்வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை கடந்த டிசம்பர் 1 முதல் மிகவும் அதிகரித்துள்ளது.
ஒரே சமயத்தில் வந்திறங்கிய இப்பயணிகளிடம் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை அமலாக்குவ தில் நெருக்கடி உருவானது. இதன் காரணமாக, வெளிநாட்டுப் பயணிகளின் கூட்டம் நேற்று முன்தினம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றது.
பண்டிகைக் காலங்களில் நெரிசலுக்கு உள்ளாகும் ரயில் நிலையங்களை போல், டெல்லி சர்வதேச விமான நிலையம் மாறத் தொடங்கியது. வெளிநாடுகளில் இருந்து வந்திறங்கிய பயணிகள் ஒரு நாளுக்கு மேல் காத்திருக்கும் சூழல் உருவானது. தங்கள் உடைமைகளுடன் அவர்கள் விமான நிலையத்தில் தரையில் நெரிசலுடன் அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பயணிகளை வரவேற்க வந்தஉறவினர்களின் கூட்டமும் அதிகரித்து, சாலை ஓரங்களிலும் அவர்கள் காத்திருக்கும் நிலை உருவானது.
இந்நிலையில், விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பதிவில், ‘விமான நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பயணிகளின் குடியேற்ற சோதனைகளுக்காக 8 வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு நெருக்கடி ஏற்படாத வகையில் அன்றாடம் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் விமான நிலையங்கள் உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.